தமிழகத்திற்கான காவிரி தண்ணீரை திறக்கத் தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆத்திரமடைந்த கன்னட அமைப்பினர், மாண்டியாவில் உள்ள திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட போஸ்டரைக் கிழித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீரைப் பகிர்வதில் தொடர்ச்சியாகப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேச இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மாண்டியா பகுதியில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற போராட்டத்தின் போது, ‘குரு ஸ்ரீ’ என்ற திரையரங்கின் முன்பு விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
