டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியை தொடர்ந்து.. விஜய் ஹிட் லிஸ்ட்டில் 3 திமுக மாஜிக்கள்! எஸ்.பி. வேலுமணி மீண்டும் கலகம்!

Published On:

| By Mathi

DMK Ex Ministers Vijay

வைஃபை ஆன் செய்ததும், “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்..” என திருக்குறளை படித்தபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. இன்னைக்கு திருக்குறளோட என்ட்ரி?

எத்தனை நாளைக்குதான் பாட்டு பாடுறது? கச்சேரி புதுசா இருக்கனும் இல்லையா? அப்படித்தானே நிலவரமும்..

ADVERTISEMENT

கரூரில 41 பேர் பலியான விவகாரம், ஆட்சி கவிழ்ப்பு சதின்னு அடுத்தடுத்து செந்தில் பாலாஜியையே தவெக டார்கெட் பண்ணிகிட்டு இருந்துச்சு.. இப்ப டாஸ்மாக் கேஸ்ல செந்தில் பாலாஜியை ‘தூக்க’ போகுது விஜய் ‘சர்க்கார்’.

செந்தில் பாலாஜிக்கு எதிரான எப்.ஐ.ஆர்.-ல் டாஸ்மாக்கில் அவரோட கரூர் கேங் எப்படி எல்லாம் ஆப்பரேட் பண்ணுச்சுன்னு விலாவாரியா சொல்லி இருக்குது விஜிலென்ஸ்.. அதுவும் அமலாக்கத்துறை டாக்குமெண்ட்ஸை வெச்சு.. ஹைகோர்ட்டும் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் இல்லைன்னு சொல்லிடுச்சு..

ADVERTISEMENT

இப்ப உச்சநீதிமன்றத்துல அப்பீல் செஞ்சிருக்கிறாரு செந்தில் பாலாஜி.. நாளைய விசாரணையில் உச்சநீதிமன்றம் என்ன ஆர்டர் தருமோ?ன்னு பரபரப்பா இருக்குது..

தவெக ஆட்சியில கே.என். நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜின்னு வரிசையா திமுக மாஜிக்கள் குறிவைக்கப்பட்டுகிட்டு இருக்காங்க..

ADVERTISEMENT

இந்த லிஸ்ட்டில் அடுத்தது யாருன்னு சிஎம் விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “பொதுவா விஜிலென்ஸ் ரெய்டு போறதுக்கு முன்னாடி சிஎம் விஜய்கிட்ட எந்த எந்த இடத்துக்கு போறோம்னு லிஸ்ட் கொடுத்துடுவாங்க.. சிஎம் ஓகே சொன்னதுக்கு அப்புறமா டீம் களமிறங்கும்..

இப்ப செந்தில் பாலாஜிக்கு அப்புறமா 3 மாஜிக்களும் அவங்க சம்பந்தப்பட்ட இடங்களும் சிஎம் விஜய் கிட்ட போயிருக்கு.. அன்பில் மகேஷ், மூர்த்தி, சேகர் பாபு.. இந்த 3 மாஜி பேருதான் அந்த லிஸ்ட்ல இருக்கு..

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆக்‌ஷன் தொடங்குன கையோட, சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 5-ல் கூடுவதற்கு முன்னதாகவே அல்லது சட்டசபை கூட்டத்துக்கு பின்னரோ இந்த 3 பேரில் ஒருவரோ அல்லது அடுத்தடுத்து 3 பேருமோ ரெய்டில் சிக்க போறது கன்ஃபார்ம்னு மட்டும் தெரியுது.. சிஎம் விஜய் யாரை முதல்ல டிக் அடிக்க போறாருன்னுதான் விஜிலென்ஸ் டீம் வெயிட்டிங்”ன்னு சொல்றாங்க ப்ரோ…

அப்ப விடிஞ்சு எந்திருச்சா பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது?

அப்படித்தான் போல.. வைகோ புக் ரிலீஸ் பங்ஷன் பத்தி நேத்து பேசுனமே அதுல ஒரு பாலோ அப் காதுக்கு வந்துருக்குங்க ப்ரோ..

நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரங்கள், “பொதுவா சிஎம் 6 மணிக்கு மேல எந்த ஒரு பங்ஷனிலும் இருக்கிறது இல்லை.. மீட்டிங் உட்பட எதுக்கும் அக்செப்ட் பண்றதும் இல்லை..

கலெக்டர், ஐபிஎஸ் அதிகாரிங்க மீட்டிங் நடந்த அன்னைக்கு கூட 5.59-க்கே தலைமை செயலாளரை பார்த்து மீட்டிங்கை முடிங்கன்னு சொல்லிட்டாரு சிஎம்.. உடனே மீட்டிங்கும் முடிஞ்சுருச்சு.. இது சிஎம்மோட ஒர்க்கிங் ஸ்டைல்..

ஆனா வைகோவோட டெல்லி பங்ஷன் ஆரம்பிக்கிறதே சாயங்காலம் 5 மணிக்குதான்.. அதுல ராகுல் காந்தி, மேதாபட்கர் தொடங்கி 20-க்கும் மேற்பட்டவங்க பேரு பேசனுமாம்.. இவங்க எல்லாம் பேசிட்டு சிஎம் பேச நைட் 9 மணிக்கு மேல ஆகிடும்.. பொதுவாகவே தவெக மீட்டிங்கில கூட ஒரு மணிநேரத்துக்கு மேல சிஎம் இருக்கிறது இல்லை.. ஆனா வைகோ விழாவுக்கு போல சில பல மணிநேரம் இருக்க வேண்டியது இருக்கும்..

அதோட மேதா பட்கர் போன்றவங்க பேசும் போது ஸ்டெர்லைட் உள்ளிட்ட சர்ச்சையான விஷயங்களை பேசி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகளை எல்லாம் வைக்கவும் சான்ஸ் இருக்கு.. எதுக்கு இந்த தர்மசங்கடம்னுதான் நாசூக்காக பட்ஜெட்டை காரணம் காட்டி டெல்லிக்கு வரலைன்னு வைகோகிட்ட சொல்லிட்டார் சிஎம் விஜய்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இன்னொரு விஷயத்தையும் ஷேர் செய்யறேன் ப்ரோ.. அதிமுகவில அடங்கி இருந்த புயல் மறுபடியும் வீசப் போகுது…

எடப்பாடிக்கு எதிராக அதிருப்தியாக இருக்கிற எஸ்பி வேலுமணி கடந்த ரெண்டு மூணு நாளா தன்னோட ஆதரவாளர்களுடன் சீரியஸ் டிஸ்கஷனில் இருக்கிறார்..

இதை பத்தி எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவங்ககிட்ட கேட்டப்ப, “எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட அதிருப்தி கோஷ்டி தலைவர்கள்கிட்ட இருந்து பறிச்ச மா.செ. பதவியை திரும்ப தரனும்னுதான் கோரிக்கை வைக்கிறாங்க.. ஆனா எடப்பாடி அதைப் பத்தி எல்லாம் கவலைப்படலை.. அவரும் புதுசா போட்ட மா.செ.க்களை வெச்சு தொடர்ந்து மீட்டிங் நடத்துறாரு.. எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றவங்க இந்த கூட்டங்களுக்கு போகாமலேயே புறக்கணிக்கிறாங்க..

இந்த நேரத்துல தவெகவுக்கு போன சி. விஜயபாஸ்கர் போன்றவங்க இப்ப வேலுமணிகிட்ட பேசுகிட்டு இருக்காங்க.. ஏன் இன்னமும் அமைதியா இருக்கீங்க? பேசாம இங்க வந்துடுங்க அண்ணே.. நல்ல முடிவா எடுங்கன்னு சொல்லிகிட்டே இருக்காங்க..

இதை எல்லாம் தெரிஞ்சும் கூட இன்னைக்கு எடப்பாடி இன்னைக்கு வெளியிட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அறிக்கையில, கட்சியின் ”துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி”ன்னுதான் குறிப்பிட்டிருக்கிறார்.. அப்ப எங்களோட டிமாண்டை பத்தியே இபிஎஸ் கவலைப்படலைதானே..

அதனாலதான் சீக்கிரமா ஏதாவது முடிவு எடுக்கனுமேன்னு சீரியஸ் டிஸ்கஷன் ஓடுகிட்டு இருக்குங்க ப்ரோ”ன்னு சொல்றாங்க..

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொத்து கொத்தா ராஜினாமா செய்யுறது, தவெகவுக்கு தாவுறதுன்னு கேம் மறுபடியும் ஆரம்பிக்குமா? இல்லை எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் எல்லாம் சேர்ந்து அதிமுகவில புது பிரளயத்தை உருவாக்க போறாங்களான்னு அந்த கட்சி தொண்டர்கள் திக்.. திக்.ன்னு திகிலடிச்சு நிற்கிறாங்க ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share