முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், முதலமைச்சர் விஜய் இது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தன்னிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகவும், மேகதாதுவை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மேகதாது அணை விவகாரம் குறித்துக் கர்நாடக முதல்வரைச் சந்திக்கக் கூடாது எனத் தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை 30) தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் உடனடியாகக் கருத்து தெரிவிக்க முடியாது,” என்றார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று கூறினார்.
