மேகதாது அணை எதிர்ப்பு: “ராகுல் காந்தி ஒரே ஒரு வரி சொல்லட்டும்” – அன்புமணி சவால்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Anbumani

“கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக் கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரே ஒரு வரி சொன்னால் பாமக NDA கூட்டணியில் இருந்து உடனடியாக விலகத் தயார்” எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “மேகதாது அணை கட்டப்படுவதற்கு முன்பாகவே, போதிய தண்ணீர் இருந்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரைக் கொடுக்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், அணை கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்திற்குக் குடிநீர்கூடக் கிடைக்காத சூழல் உருவாகும். இது மிகப்பெரிய தவறு.

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் கர்நாடகா செல்லக் கூடாது; அதற்குப் பதிலாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இது ஏதோ தவெக என்ற கட்சியின் பிரச்சனை கிடையாது; தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. இதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்தி வருகிறேன். கர்நாடக அரசு இந்த விவகாரத்தை வேறு கோணத்திற்குக் கொண்டு செல்ல முயல்கிறது, அந்தச் சூழ்ச்சியில் முதலமைச்சர் விழக் கூடாது.

மேலும், மேகதாது அணைக்குத் தடை விதிக்கக் கோரி அன்புமணி பிரதமரிடம் சொல்வாரா என்ற மாணிக்கம் தாகூர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ” நாங்களும் அதைத்தான் தொடர்ந்து கூறி வருகிறோம். தமிழக முதலமைச்சர் எங்களை அழைத்துச் சென்றால், பிரதமரைச் சந்தித்துப் பேச நாங்களும் தயாராக இருக்கிறோம்.

ADVERTISEMENT

இதே கோரிக்கையைக் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்குத் தைரியம் இருக்கிறதா? வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அப்போது மாணிக்கம் தாகூர், ‘மேகதாது அணை கட்டக் கூடாது; அது தமிழகத்திற்கு எதிரானது, சட்டத்திற்கு எதிரானது, காடுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் எதிரானது’ என்று ராகுலிடம் வலியுறுத்துவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக் கூடாது என்று ராகுல் காந்தி ஒரே ஒரு வரி சொல்லட்டும்; நாங்கள் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share