மேகதாது அணை- கர்நாடகாவுக்கு ’ஷாக்’ கொடுத்த மத்திய அரசு!

Published On:

| By Mathi

Mekedatu Dam

மேகதாது அணை தொடர்பான கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டது.

கர்நாடகாவின் மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையானது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டுத் தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கர்நாடகாவின் மேகதாது அணை திட்ட அறிக்கையில், சிவனசமுத்திரம் நீர்மின் உற்பத்தி திட்டத்தையும் இணைத்துள்ளது விதிமீறல் எனவும் நீர்வள ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.

அத்துடன், குடிநீர்த் தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாகப் பயன்படுத்தும் வகையில் மேகதாது அணை திட்ட வரைவு மாற்றப்பட்டுள்ளதாகவும் குடிநீருக்கான அளவு 4.75 டி.எம்.சி-யில் இருந்து 6.95 டி.எம்.சி-யாக உயர்த்த வேண்டும் என்று கர்நாடகா கோருவது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவும் நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் பெங்களூரு நகரின் உண்மையான குடிநீர்த் தேவை மற்றும் தற்போதைய நீர் பயன்பாடு குறித்த கர்நாடகா அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் கணக்கீடுகளில் பிழைகள் உள்ளதாகவும் மத்திய நீர்வள ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடகா அரசுக்கு பெரும் பின்னடைவு.

மக்களவையில் மத்திய அரசு சொன்னது என்ன?

மக்களவையில் மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் பிரகாஷ்,விஷ்ணு பிரசாத், செல்வகணபதி, கணபதி ராஜ்குமார், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஜூலை 30-ந் தேதி எழுப்பிய கேள்விகள்:

ADVERTISEMENT

கேள்விகள்:

  • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை அமைக்க கர்நாடக மாநில அரசிடமிருந்து மத்திய அரசு ஏதேனும் முன்மொழிவைப் பெற்றுள்ளதா, அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை என்ன?
  • காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டப்படுகிறதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன?
  • மத்திய அரசானது, மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கவோ அல்லது ஒப்புதல் அளிக்கவோ கூடாது என்பதுடன், சுற்றுச்சூழல் அனுமதிகள் உள்ளிட்ட எந்தவொரு ஒப்புதலையும் வழங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இது தொடர்பாக மத்திய அரசின் பதில் என்ன?
  • காவிரி படுகை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மத்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் ஆய்வு நடத்தியுள்ளதா, அப்படியானால் அதன் விவரங்கள் என்ன?
  • காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் கீழ் தமிழ்நாட்டின் நியாயமான பங்கைப் பாதுகாக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி அளித்த பதில்:

கர்நாடக அரசு 2019-ல் சமர்ப்பித்த மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), காவிரி நீர் நடுவர் மன்ற (CWDT) தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) நடைமுறைகளுக்கு இணங்க, திருத்தப்பட்ட DPR-ஐ சமர்ப்பிக்குமாறு கோரி திட்ட அதிகாரிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிரச்சனை குறித்த 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவதற்கு கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ்நாடு அரசு மற்றும் விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எந்தவொரு திட்டத்தின் மீதான பிரதிநிதித்துவங்களும், பொருந்தக்கூடிய நடைமுறைகளின்படி திட்ட மதிப்பீட்டின் போது பரிசீலிக்கப்படும்.

நதி நீர் தாவா சட்டம், 1956-ன் பிரிவு 6A-ன் கீழ், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகியவை அமைக்கப்பட்டு, காவிரி நீர் நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் ஆணைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share