சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் மசோதா இன்று ஜூலை 30-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர்.
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் ‘தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்தச்) மசோதா, 2026’ மாநிலங்களவையில் நேற்று ஜூலை 29-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள அதே சட்டப் பாதுகாப்பை தேசியப் பாடலான ‘வந்தே மாதரத்துக்கும்’ வழங்குவதே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வகை செய்கிறது இந்த மசோதா.
இந்நிலையில் மக்களவையில் இன்று ”வந்தே மாதரம்” மசோதாவில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்திய ஆ.ராசா, “இன்றைய நாள் நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான நாளாகும். நான் ஏன் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருகிறேன் என்றால்… இந்த மசோதாவின் நோக்கங்களையும் காரணங்களையும் நான் கவனமாகப் பார்த்தேன். இது ஒரு மோசடி மற்றும் ஏமாற்று வேலை தவிர வேறொன்றுமில்லை.
ஜனவரி 24, 1950 அன்று நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக் கூட்டத்தில், அதன் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் குறிப்பிடுகையில், பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல் இந்திய விடுதலைப் போரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு வகித்ததால், அது ‘ஜன கண மன’ தேசிய கீதத்திற்கு இணையான கவுரவத்தைப் பெறும் என கூறினார்.
நான் ஏற்கனவே இந்த மசோதா குறித்துப் பேசியுள்ளேன். இந்த நாட்டில் மத ரீதியான பிளவுகள் ஏற்பட இரு நபர்களும் ஒரு பாடலும் மிக முக்கியக் காரணம். ஏன் இந்தியா பிரிவினை கண்டது? ஒரு நபர் சாவர்க்கர், மற்றொருவர் ‘வந்தே மாதரம்’ பாடல்” என்றார்.
தமிழ்நாட்டுக்கு எதிரானது
கனிமொழி எம்.பி. பேசியதாவது: நாங்கள் இந்த மசோதாவை எதிர்க்கிறோம். இது தேசியவாதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு கொண்டுவரப்படும் ஒரு ஹிந்துத்துவா அஜெண்டா.இது இந்த நாட்டு மக்களுக்கு எதிராகவும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து தேசியவாதத்தை திணிக்க முடியாது. மக்களைக் கட்டாயப்படுத்தி ஒரு தேசியப் பாடலை மதிக்க வைக்க முடியாது.
மரபுப்படி சபையானது தற்போது ஒழுங்காக இல்லை. நான் எவ்வளவு நேரம் பேச முடியும்? அவை ஒழுங்காக இல்லாதபோது நம்மால் எப்படி விவாதிக்க முடியும்? இதை நாம் விவாதிக்க வேண்டும்; இது ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கான முறையான வழி அல்ல.
இது மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது; இந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்த நாட்டின் மிகச் சிறந்த தலைவர்கள், உயர்ந்த தலைவர்கள் இரண்டு சரணங்களுடன் வந்தே மாதரத்தை நிறுத்த சொன்னார்கள். ஆனால் நீங்கள் வந்தே மாதரத்தை முழுமையாக பாடவில்லை என்றால் குற்றம் என்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் எங்களுக்கென்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப் பாடல் உள்ளது. எங்கள் மாநிலப் பாடலுக்குத் தான் முதலிடம் கொடுத்து வருகிறோம். இந்த மசோதாவைக் கொண்டுவருவதன் மூலம் நீங்கள் தமிழர்களை அவமதிக்கிறீர்கள். இது தமிழகத்திற்கும், தங்களது சொந்த மாநிலப் பாடலைக் கொண்டுள்ள பல மாநிலங்களுக்கும் செய்யும் அவமரியாதையாகும்.
ஏன் இந்த நாட்டைப் பிரிக்கிறீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களெல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறீர்கள். இந்த அரசாங்கம்தான் தேசவிரோதமானது; நாட்டின் மக்கள் மீது இதுபோன்ற பாடல்களைத் திணித்து இந்த நாட்டைப் பிளவுபடுத்துகிறது.
இது தேசியவாதம் அல்ல. திமுக இந்த மசோதாவை எதிர்க்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. முறையான விவாதம் ஏதுமின்றி, கூச்சல் குழப்பங்களுக்கு இடையில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது நாட்டின் நாடாளுமன்றத்திற்கே எதிரான செயலாகும். நீங்கள் மாநிலங்களின் குரலையும் கேட்க வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
