வந்தே மாதரம் (Vande Mataram) பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் ‘தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்தச்) மசோதா, 2026’ மாநிலங்களவையில் இன்று ஜூலை 29-ந் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள அதே சட்டப் பாதுகாப்பை தேசியப் பாடலான ‘வந்தே மாதரத்துக்கும்’ வழங்குவதே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், இந்தச் சட்டத் திருத்தம் வெறும் சாதாரண சட்டம் மட்டுமல்ல என்றார். இந்தியாவின் ஆன்மா, கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்கள் மீதான கூட்டு அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம் மூலம் தேசியக் கொடி, அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ ஆகியவற்றுக்கு உரிய மரியாதை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது; தற்போது ‘வந்தே மாதரம்’ பாடலை வேண்டுமென்றே அவமதித்தால், தற்போதைய சட்டத்தின்படி என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும் என்றார்.
மேலும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ கடந்த 1875 ஆம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது. கடந்த 1935 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ‘வந்தே மாதரம்’ பாடலை இரண்டே சரணங்களாக சுருக்கிவிட்டார்.
மறுபுறம், 1928 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அப்பாடலுக்கு முழுமையான மற்றும் கண்ணியமான இசை வடிவத்தைத் தயாரிக்கக் கோரியதாக அவர் கூறினார்.
அத்துடன், 1947 ஆகஸ்ட் 15 அன்று முதல் சுதந்திர தினத்தின் தொடக்கமாக, அகில இந்திய வானொலியில் காலை 6:30 மணிக்கு முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுமாறு சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டிட் ஓம்கார்நாத் தாகூரைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
