திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டாஸ்மாகில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ”ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் அரசிடமிருந்து பெறப்பட்ட கடித இணைப்புகளில் கண்ட சங்கதிகளின் அடிப்படையில் அதன் உண்மை தண்மை சரிபார்க்கப்பட்டு பிடிக்கக்கூடிய குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்குறிய அடிப்படை ஆதாரத்தின் அடிப்படையில் 28.07.2026 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமையக குற்ற எண்.5/2026 பிரிவு 120 (ஆ), 167, 409, 109, 420 @យ ឈប់ 1, 61(2), 201, 316 (5) 2023, 13(2), r/w 13 (1)(a), 7(c), r/w 12 ஊழல் தடுப்பு சட்டம் 1988ல் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு திருத்த சட்டம் 2018-ன் படி முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர்.வி.செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலான்மை இயக்குநர் எஸ்.விசாகன், இ.ஆ.ப, டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், நேர்முக உதவியாளர், வி.செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக், தனி நபர்கள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலை, சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிற டாஸ்மாக் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
புலனாய்வின் பகுதியாக இன்று 45 இடங்களில், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்களின் வீடு, இருப்பிடம் மற்றும் மதுபான ஆலைகள், பாட்டில் நிறுவனங்கள், டாஸ்மாக் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனங்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. ஒரு இடத்தில் உரிமையாளர் சோதனை சமயத்தில் இல்லாததால் அவ்விடத்தில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் / சாட்சியங்கள் மறைத்து வைத்திருக்கககூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்ததால் அவ்விடத்தை வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. புலனாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (ஜூலை 29) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வருகிறது.
நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
ஏற்கனவே ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் பெற்று, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
