பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026 மக்களவையில் விரிவான விவாதத்திற்குப் பிறகு இன்று ஜூலை 29-ந் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
நீட் (NEET-UG) உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பான போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி முதலில் முன்னெடுத்தது. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
இதன் பின்னர் மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த அமைப்பினர் டெல்லியில் ஜந்தர் மந்தர் தொடங்கி நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய “Chalo Sansad” பேரணியின் போது மாணவர்களுக்கும் போலீசார், துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மாணவர்கள் மீது கொடூரமாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இதன் பின்னரும் மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் வெடித்ததால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பிரதமர் மோடியும், தேர்வு மோசடிகளைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், தேர்வு முறைகளின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கவும் மத்திய அரசு புதிய மசோதாவைத் தயாரித்தது.
மக்களவையில் மசோதா
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, கடந்த ஜூலை 27 அன்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இந்த விவாதத்தின் மீது பதில் அளித்துப் பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தத் திருத்தங்கள் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி மாணவர்கள், இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.
பொதுத் தேர்வு முறைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் கூறினார். தேர்வு தொடர்பான திட்டமிட்ட குற்றச் செயல்களை திறன்மிக்க வகையில் எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஏற்றுக் கொள்வதையும் அனுபவம் மூலம் கற்றுக் கொள்வதையும் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதையும் அரசின் வெளிப்படையான அணுகுமுறையை இத்திருத்தங்கள் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
யுபிஎஸ்சி, அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள், வங்கிப் பணியாளர் தேர்வாணையம், உயர் கல்வி சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை உட்பட முக்கியப் பணியாளர் சேர்ப்பு முகமைகளால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம் 2024 இயற்றப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சட்டத்திற்குள் வரும் குற்றங்கள் ஏற்கனவே கடும் தண்டனை விதிகளுடன் காவல் துறையினர் தாமாகவே நடவடிக்கை எடுக்கக் கூடிய, பிணையில் வெளியே வர இயலாத, சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் சிறைதண்டனையிலிருந்து 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்ச அபராதம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மசோதா, விரிவான விவாதத்திற்குப் பிறகு இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
