திமுக எம்பி டி.ஆர் பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் இன்று (ஜூலை29) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் பகுதியில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான ‘கோல்டன் வாட்ஸ்’ மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று (ஜூலை 29) காலை முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரி சித்ரா தலைமையில், சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சில மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில், மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின் போது, மதுபான ஆலையில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான கோப்புகள் மற்றும் வழக்கு விசாரணைக்குத் தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுகவின் முக்கியப் பிரமுகருக்குச் சொந்தமான ஆலையில் சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க மன்னார்குடி நகரப் காவல்துறையினர் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த வீடு, அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறை, கோவை பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரையில் உள்ள கிடங்கு உள்ளிட்ட 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
