டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் மீதான போலீஸ் அடக்குமுறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.
மக்களவையில் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது இன்று ஜூலை 29-ந் தேதி ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அழைத்தார். ஆனால் ராகுல் காந்தியோ, பேச எழுந்திருக்கவில்லை. அப்போது, ‘நான் பேசினால் பாஜக எம்.பி.க்கள் இடையூறு செய்து முழக்கமிடுகின்றனர்’ என சைகை மூலமாக சபாநாயகரிடம் சொன்னார் ராகுல் காந்தி. இதனால் கடுப்பான சபாநாயகர் ஓம் பிர்லா, நீங்கள் பேசாவிட்டால் மற்றவர்களை பேச அழைப்பேன் என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது: நான் பேசுவதற்கு முன்பு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நமது நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் வீதிகளில் போராடியதைக் கண்டு நான் மிகவும் சிலிர்த்துப் போனேன், ஈர்க்கப்பட்டேன்.
மாணவர்கள் வெளிப்படுத்தியது கோபமோ, வன்முறையோ, வெறுப்போ அல்ல. இது நமது நாட்டின் இளைஞர்களின், எதிர்கால சந்ததியினரின் உணர்வுகளின் வெளிப்பாடு. பாஜகவில் உள்ள என் நண்பர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த உணர்வை மதிக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் இந்த போராட்டங்கள் குறித்து பெருமைப்பட வேண்டும்.
நான் சில இளம் மாணவிகளுடன் நடத்திய ஒரு உரையாடலில் இருந்து தொடங்குகிறேன்.
நான் அந்த மாணவியிடம் கேட்டேன்: “நீ ஒரு மாணவி என்று சொல்கிறாய், இதன் அர்த்தம் என்ன? கல்லூரியில் படிக்கிறாய் என்பதா? பள்ளியில் படிக்கிறாய் என்பதா? புத்தகங்களைப் படிக்கிறாய் என்பதா? இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.
அவள் எனக்கு மிக அழகான பதிலைச் சொன்னாள். “மாணவன் என்பவன் திறந்த மனதுடனும் திறந்த இதயத்துடனும் இருப்பவன். தனக்கு எல்லாமே தெரியும் என்பதை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளாதவனே மாணவன். தனக்குத் தெரிந்த எதையும் பிற்காலத்தில் ஏதோ ஒரு புதிய அறிவு மீறக் கூடும் என்பதை மாணவன் ஏற்றுக்கொள்கிறான். பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது, பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் மாணவன், அறிவும் தொடர்ந்து மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறான்” என்றாள்.
“ஒரு மாணவனின் மிக முக்கியமான குணம் என்ன?” என்று நான் கேட்டேன்.
அவள் ஒரு நொடியில், “பணிவு ” என்றாள். ஏன் என்று கேட்டால், “தனக்கு உண்மை முழுமையாகத் தெரியாது என்பதை மாணவன் அறிகிறான். காந்தியடிகள் தனது சுயசரிதையில் கூறியது போல – ”இது எனது உண்மை, உங்களது உண்மை வேறுபட்டதாக இருக்கலாம்” என்றாள்.

முட்டாள் கூட்டம்
அடுத்து நான் அவளிடம், “இந்த மாணவர்களைத் தவிர வேறு பிரிவினர் உண்டா?” என்றேன்.
அவள் சொன்னாள்: “மற்றொரு குழு இருக்கிறது. அவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்கள் யார்?” என்று கேட்டேன். “தனக்கு எல்லாமே தெரியும் என்று முழுமையாக நம்புகிறவர்கள்; பிரபஞ்சம் நிலையானது; அறிவு தங்களுக்குள்ளிருந்தே வருகிறது என்றும் நம்புவோர் அவர்கள். தாங்களே கடவுள் என்றும், அறியப்பட வேண்டியவை அனைத்தும் தமக்குத் தெரியும் என்றும் நம்புகிறார்கள். அவர்கள் அகங்காரம் பிடித்தவர்கள். அவர்கள் கேட்பதில்லை, மற்றவர்களின் உண்மையை மதிப்பதில்லை” என்றாள்.
“அப்படியானவர்களை நீங்கள் என்ன அழைப்பீர்கள்?” என்று நான் கேட்டேன்.
அவள் சொன்னாள்: “நான் அவர்களை முட்டாள்கள் என்று அழைக்கிறேன்” என்றாள்.
(பாஜக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்)
நான் யாரையும் அப்படி அழைக்கவில்லை.. நான் ஒரு மாணவி சொன்ன வரையறையைச் சொல்கிறேன். இந்த உலகில் இரண்டு பிரிவுகள் உள்ளன என்று அந்த மாணவி கூறினாள். விவசாயி ஒரு மாணவனாக இருக்கலாம், வழக்கறிஞர் மாணவனாக இருக்கலாம், மருத்துவர் மாணவனாக இருக்கலாம், வேலையற்ற இளைஞர் மாணவனாக இருக்கலாம். எல்லாவற்றையும் உறிஞ்சக் கூடிய ஸ்பாஞ்ச் போன்ற கற்கும் தாகம் அது.
ஆனால் இந்த முட்டாள்கள் என்பவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. மாணவன் எப்போதும் உண்மையை தன் நெஞ்சில் சுமக்கிறவன்ம. ஆனால் மற்ற கும்பலுக்கு ஒரு பிம்பம் தேவைப்படுகிறது. அந்த முட்டாள், தான் கடவுள் என்று பாசாங்கு செய்ய முயல்வதால், அந்தப் பிம்பம் உண்மையல்ல என்பதால், அந்த் முட்டாள் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது.
இவர்கள் இல்லாமல், முட்டாளைப் பின்பற்றும் ஒரு கூட்டமும் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், நமது மாணவர்கள் தேர்வுகள் பற்றிப் பேசுவது போலத் தோன்றலாம். கல்வி முறை பற்றிப் பேசுகிறார்கள், கல்வியின் செலவு பற்றிப் பேசுகிறார்கள். இது உண்மைதான், கல்வி முறை மிகவும் செலவுமிக்கதாகிவிட்டது. அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் பட்ஜெட்டை விட, ஒரு தேர்வுக்காக அதிகம் செலவிடப்படுகிறது.
(பாஜக எம்.பி..க்கள் மீண்டும் கூச்சல் குழப்பம்)
நான் யாரையும் முட்டாள் என அழைக்கவில்லை, நான் ஒரு மாணவி சொன்னதைத்தான் விளக்கிக் கொண்டிருக்கிறேன். முட்டாள் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். அதைத் தவிர்க்கிறேன்.
மாணவன் என்பவன் உண்மையைத் தேடுபவன். உண்மையை விடச் சுவையானது வேறொன்றும் இல்லை.

மாணவர்களின் தீரமிக்க போராட்டம்
இன்றைய கல்வி முறை எப்படி இருக்கிறது? நம் மாணவர்கள் ஏன் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்? தேர்வுகள் குறித்தோ அல்லது கல்வி முறை குறித்தோ மட்டும் கவலைப்படவில்லை. அவர்கள் பல ஆண்டுகள் படிக்கிறார்கள். ஆனால் இறுதியில் வினாத்தாள் கசிவு நடக்கிறது. பணக்காரப் பையனோ பெண்ணோ பணம் கொடுத்து வினாத்தாளை வாங்கி வேலை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, ஏழையான, நேர்மையான மாணவன் புறக்கணிக்கப்படுகிறான்.
இந்தக் காரணங்களினால்தான் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். நமது கல்வி முறை பயங்கரமானது, கொடூரமானதாகிவிட்டது. ஏழை எளிய மக்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிக்கப்படுகின்றன. எல்லாமே தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. ஒரு தேர்வில் வினாத்தாள் கசிவு, இன்னொரு தேர்வில் வேறு ஏதோ தவறு நடக்கிறது. சிலருக்கு மறுதேர்வு அனுமதிக்கப்படுகிறது, சிலருக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ். பிடியில் மத்திய கல்வி அமைச்சகம்
இது ஒரு கொடூரமான, மிரட்டிப் பணம் பறிக்கும் அமைப்புமுறையாக மாறிவிட்டது. இந்த அமைப்புமுறை கைப்பற்றப்பட்டுவிட்டது. இந்த அமைப்புமுறையின் ஆன்மா ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் காலத்தில் கல்வி அமைச்சகத்தை இயக்கும் அமைப்பின் பெயர் ஆர்.எஸ்.எஸ்.
இன்றைய இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரே துணைவேந்தராக உள்ளார். தர்மேந்திர பிரதான் வெறும் ஒரு அடையாளம் மட்டுமே, உங்களின் உண்மையான எதிரி ஆர்.எஸ்.எஸ் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை மாணவர்களாக இருக்க விடாமல் தடுப்பவர்கள் அவர்கள்தான். உங்களை முட்டாள்களின் பக்தர்களாக மாற்ற விரும்புபவர்கள் அவர்கள்தான்.
ஆனால் இந்தியாவின் ஆன்மா இதற்கு எதிர்வினையாற்றுகிறது. “எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் உங்களின் முட்டாள் பக்தர்களாகப் மாறப் போவதில்லை; எங்களது எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம்” என்று குரல் கொடுக்கிறது. இந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு பாஜகவையோ, ஆர்.எஸ்.எஸ்-ஸையோ எதிர்க்கும் தைரியம் இருக்கவில்லை. ஆனால் இந்தப் பிள்ளைகள் மிகவும் துணிச்சலாக, ஆக்கபூர்வமாக, சக்திவாய்ந்தவர்களாக எழுந்து நின்று அவர்கள் வீசிய அத்தனையையும் எதிர்கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்ப்பது குறித்தும், நரேந்திர மோடியை எதிர்ப்பது குறித்தும் எனக்கு ஓரளவுக்கு அனுபவம் உண்டு. சவால் என்பது அவர்களை எதிர்த்து நிற்பதல்ல; சவால் என்பது உங்களது சொந்த பயத்தை எதிர்கொள்வதுதான். அதுதான் மாணவர்கள் செய்தார்கள். மாணவர்கள் தங்கள் பயத்தை வென்றார்கள்.
எங்களுக்கு ஏன் வேலைகள் வழங்கப்படவில்லை? என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள். உங்களால் அதைத் தடுக்க முடியவில்லை.

அமித்ஷாவுக்கு தைரியம் இல்லை
இன்றைக்கு இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் (அமித்ஷா) இங்கே வந்து அமரும் தைரியம் இல்லாமல் இருப்பதைக் கண்டு நான் வருந்துகிறேன். உள்துறை அமைச்சரின் காரைப் பார்த்தேன், உள்ளே அவர் நடுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். உள்துறை அமைச்சர் இன்று ஏன் இங்கே இல்லை? அவர் பயந்துவிட்டதால் வரவில்லை.
(பாஜக எம்.பி.க்கள் மீண்டும் கூச்சல் குழப்பம்)
துப்பாக்கிச் சூடு நடத்த சொன்ன அமித்ஷா
உள்துறை அமைச்சர் எங்கள் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார்…
(பாஜக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தனர்)
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, “ ராகுல் காந்தி தனது உரையின் போது நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணான, நாகரிகமற்ற மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் இது போன்ற தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்துவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல” என்றார்.

மக்களவையில் கூச்சல் குழப்பம்
ஆனால் கிரண் ரிஜுஜூ பேச்சுக்கு நடுவே குறுக்கிட்ட ராகுல் காந்தி, “உள்துறை அமைச்சர் எங்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்; அவர் மாணவர்களின் இரத்தத்திற்குள் பெல்லட் குண்டுகளை செலுத்தினார்; நாட்டின் மாணவர்களை சுட உத்தரவிட்டவர் அமித்ஷா” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, “ஆதராமற்ற குற்றச்சாட்டுகளை பேசக் கூடாது” என்று சொல்ல சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
