திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்த கொளத்தூர் சட்டசபை தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிம்பல் லோடிங் யூனிட் (Symbol Loading Unit) என்ற கருவியைப் பொருத்துகிறார்கள்.
அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், விவிபேட் உள்ளிட்ட அனைத்தையும் நாம் பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் கூட, அந்த சிம்பல் லோடிங் யூனிட் என்று சொல்லக்கூடிய அந்த கருவியை தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்புதான் பொருத்துவார்கள்.
உச்சநீதிமன்றமானது, தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் 7 நாட்களுக்குள்ளாக மனு செய்தால், அந்த சிம்பல் லோடிங் யூனிட் சரியாக வேலை செய்ததா இல்லையா என்பதை பார்ப்பதற்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
மு.க.ஸ்டாலின் கொடுத்த மனுவின் அடிப்படையில் இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் யூனிட்டுகள் சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய கேட்டிருந்தோம்.மத்திய அரசின் பெல் நிறுவன என்ஜினியர்கள் (BHEL Engineers) இந்த ஆய்வுக்கு வந்துள்ளனர். இவ்வாறு என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் கொளத்தூர் தொகுதியில் 14 பூத்துகளுக்கு உட்பட்ட பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், விவிபேட் ஆகியவற்றின் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு ‘ஈவிஎம் செக்கிங் அண்ட் வெரிபிகேஷன்’ (CNPV – EVM Checking and Verification) என்று பெயர்.
சென்னையில் கொளத்தூர் தொகுதியில் நடக்கிறது. பிற மாவட்டங்களான காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் நடக்கிறது.
பொதுவாக முதல் 3 இடங்களில் வந்த வேட்பாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தேர்வு செய்து தந்த 14 வாக்குச்சாவடிகளில் முதல் கட்டமாக இரண்டு போலிங் ஸ்டேஷனுக்கான பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், விவிபேட் சரி பார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்தச் சரிபார்ப்புப் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும்:
கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரையில் மூன்று பேலட் யூனிட்கள் (நோட்டா உட்பட 36 வேட்பாளர்கள் உள்ளதால் 3 பேலட் யூனிட்), ஒரு கண்ட்ரோல் யூனிட், ஒரு விவிபேட் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர் அல்லது அவரது தலைமை முகவர் முன்னிலையில் இந்த பணி நடைபெறும்.
பெல் (BHEL) என்ஜினியர்கள் தலைமையில் பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் ஆகியவற்றின் சீரியல் நம்பர்கள் சரியானவையா என்றும், அவற்றை கண்ட்ரோல் யூனிட் (CU) மற்றும் விவிபேட் (VVPAT) சரியாக அடையாளம் காண்கிறதா என்றும் முதலில் சரிபார்க்கப்படும்.
அதற்குப் பிறகு, ‘பர்ன்ட் மெமரி’ (Burned Memory) சரிபார்க்கப்படும். அதாவது, ஏற்கனவே அந்த பேலட் யூனிட்டில் எத்தனை ஓட்டுகள் பதிவாகியுள்ளனவோ, அந்த ஓட்டுகளை 1 முதல் 36 வரையிலான வேட்பாளர்கள் வாரியாகச் சரிபார்த்து வேட்பாளரின் ஏஜென்ட்டுக்கு காண்பிப்பார்கள்.
அடுத்ததாக ஏற்கனவே பதிவான ஓட்டுகளை முழுமையாக, வேட்பாளரின் ஏஜென்ட் முன்பாக நீக்கிவிட்டு மாதிரி வாக்குப் பதிவு (Mock Poll) நடத்தப்படும். அதிகபட்சம் 1400 ஓட்டுகள், குறைந்தபட்சம் 500 ஓட்டுகள் வரை மாதிரி வாக்குப் பதிவில் சேகரிக்கப்படும்.
இந்த முழுமையான செயல்முறை எதற்காகச் செய்யப்படுகிறது என்றால், நமது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்கவும், மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு அந்த இயந்திரத்தின் மைக்ரோ சிப் மற்றும் யூனிட்களின் நம்பகத்தன்மையைக் காட்டுவதற்காகவும்தான்.
இது முழுமையாக ஒரு வார காலகட்டத்திற்குள் முடிக்கப்படும். இது மறு எண்ணிக்கை அதாவது ரீகவுண்டிங் அல்ல. இது முடிவுடைந்த பிறகு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
