தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படை? – விஜய்யை விளாசிய நயினார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Nainar

தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க தமிழக முதல்வர் விஜய் எந்த படையை அமைக்க பேகிறார் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

ADVERTISEMENT

அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்வர் ஜோசப் விஜய் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!” என வலியுறுத்தி உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share