சீமான் மீது அவதூறு: பிஸ்மி உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவதூறு பேசுதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 5 பிரிவுகளில் மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு அவரது பெயருக்குக் களங்கம் விளைவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, பிஸ்மி அளித்த பேட்டி ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சீமான் ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற தகவலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து கடந்த ஜூலை 3-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் நேற்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தில் சீமான் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் குறித்துப் பேசும்போது நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் பார்க்கிறதா?” எனத் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மேலும், இந்த புகார் மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சீமான் குறித்து அவதூறு பரப்புதல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share