21 சவரன் நகை கொள்ளை: தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி சரவண குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காரியாபட்டி அருகே உள்ள வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு, 21 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இவ்வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியது தவெக இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிரடியாகக் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதான சரவண குமாரை தவெகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, தவெக மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் SP செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் ஒழுங்கு. கட்டுப்பாடு மற்றும் நலனுக்கு முரணான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், M.சரவணகுமார், மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர், அவர்களை இன்றைய தேதி முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.

எனவே, இன்றுமுதல் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலோ, கொடியையோ, சின்னத்தையோ அல்லது கட்சியின் எந்தவொரு பொறுப்பையும் பயன்படுத்தி செயல்படக் கூடாது கட்சியின் எந்த நிகழ்வுகளிலும் அல்லது அமைப்பு நடவடிக்கைகளிலும் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அனைவரும் அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share