டாஸ்மாக் வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் நடந்தது என்ன? செந்தில் பாலாஜி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

senthilbalaji meeting with Brewery owners

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். இன்று காலை ஏடிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்று அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றதை அடுத்து, குதிரை பேர வழக்கில் நீதிமன்ற நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறுகையில், “எனக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத, புகாரிலோ அல்லது எஃப்.ஐ.ஆரிலோ என் பெயர் இல்லாத சூழலில், விசாரணை என்ற பெயரில் எனது பெயரை இணைத்துள்ளனர். இந்த வழக்கின் மூலம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, அதன் அடிப்படையில் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன்.

ADVERTISEMENT

இன்று காலை நான் தங்கியிருந்த அறைக்கு வந்த காவல்துறையினர், சோதனை செய்ய வேண்டும் என்றனர். தாராளமாக நீங்கள் சோதனை செய்துகொள்ளலாம் என்று கதவைத் திறந்துவிட்டேன். அவர்கள் முழுமையாகச் சோதனை செய்த பின்னர், எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து என்னிடம் கையெழுத்து பெற்றனர். அவர்களும் கையெழுத்திட்டு அதன் ஒரு நகலை என்னிடம் வழங்கி உள்ளனர்.

டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. சோதனைகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். எனக்கு மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக மூத்த அமைச்சர்களாக இருந்த கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோர் மீதும் புகார்கள் பெறுவதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது.

ADVERTISEMENT

என்னைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. அதனால் எந்த வழக்காக இருந்தாலும், எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் நேராக நின்று அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share