“அது தனிப்பட்ட சொத்து அல்ல”: முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Published On:

| By Kavi

திமுக தலைவர் ஸ்டாலின் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.

ADVERTISEMENT

இதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தான் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், ரூ.2.27 கோடிக்கு நிலம் வாங்கியதை மறைத்ததாகவும் கூறி தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் திருஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (ஜூலை 29) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், “வேட்பு மனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை மறைத்தது குற்றம் என்றும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையம் சார்பில், “இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் தான் தாக்கல் செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், “வேட்பு மனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் தான் தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை சொத்து என்பது தனிப்பட்ட சொத்து ஆகாது. தனிப்பட்ட முறையில் இந்த சொத்துகளில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share