வைஃபை ஆன் செய்ததும், “கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்க”ன்னு வழக்கத்துக்கு மாறாக வடிவேலு டயலாக்குடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ’கண்ணிவெடி’யில கால் வைத்தது யாராம்?
ஒன்றா.. இரண்டா.. ஒவ்வொன்றா சொல்கிறேன் ப்ரோ..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன்னுடைய நாடாளுமன்ற உரைகளை தொகுத்து புத்தகமாக டெல்லியில ஆகஸ்ட் 4-ந் தேதி வெளியிடுறாரு இல்லையா? இந்த விழாவுக்கு முதல்ல சிஎம் விஜய்யைதான் அழைச்சிருந்தார் வைகோ.. சிஎம் விஜய்யும் கலந்துக்கிறேன்னு ஓகே சொன்னார்.. அதுக்கு அப்புறமா டெல்லிக்கு போய் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்கிட்ட ’டைம்’ கேட்டாரு வைகோ.. ஆனால் ‘சில பல’ காரணங்களை சொல்லி சிபிஆர், விழாவுக்கு வரலைன்னு சொல்லிட்டாரு..

இதனால ராகுல் காந்தியை பிடிச்சாரு வைகோ.. ராகுல் காந்தியும் ஓகே சொல்லிட்டாரு.. இதற்கான ஏற்பாடுகளையும் வைகோ செஞ்சுகிட்டு இருந்தாரு.. ஆனா திடீர்னு சிஎம் விஜய்யை மீண்டும் சந்திச்ச வைகோ பிரஸ் மீட்டுல, “சிஎம் வந்தா டெல்லியில கூட்டம் கூடிடும்.. அதனால நீங்க டெல்லி விழாவுக்கு வரவேண்டாம்னு நானே சொல்லிட்டேன்”ன்னு விளக்கம் கொடுத்தாரு..

ஆனா சிஎம் விஜய் தரப்புல, “ஆகஸ்ட் 5-ந் தேதி பட்ஜெட் இருக்கு.. வர முடியாதுன்னுதான் வைகோகிட்ட வெளிப்படையா சொல்லப்பட்டது.. அதோட இந்த பங்ஷன்ல கலந்துக்கிறதால பொலிட்டிக்கலா சிஎம்-க்கு எந்த மைலேஜும் கிடைக்கப் போறது இல்லைன்னு ரிப்போர்ட்ஸும் சொல்லுச்சு.. அதனால நாசூக்காக சிஎம் பட்ஜெட்டை காட்டி வரலைன்னு சொல்லிட்டார்”ன்னு சொல்றாங்க..
இதோட பிரச்சனை ஓயலையே..
வைகோவோட நூல்களை ராகுல் காந்தி வெளியிடுவதா?ன்னு காங்கிரஸுக்குள்ள புகைச்சலாகிடுச்சு.. இதை பத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர்கிட்ட பேசுனப்ப, “காலம் முழுக்க காங்கிரஸை கருவறுப்பேன்னு பார்லிமெண்ட்ல பேசுனவரு வைகோ.. இந்திரா காந்தி காலத்துலேயும் அப்படித்தான் பேசுனாரு.. ராஜீவ் காந்தியை, “ஏன் இப்படி ஓடுறீங்க?”ன்னு பார்லிமெண்ட்லே கிண்டலடிச்சவரு வைகோ..

அதோட போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குவாத்ரோச்சியை முன்வெச்சு சோனியாவை ரொம்பவே அவதூறாக பேசுனவர்தானே வைகோ..
அதே மாதிரி போபால் விஷயவாயு சம்பவத்துக்கு நாட்டை விட்டு தப்பி ஓடுன வாரன் ஆண்டர்சனுக்கும் சோனியா குடும்பத்துக்கும் தொடர்பிருக்குன்னு சொன்னவரும் இந்த வைகோதான்..
எங்க தலைவர் ராஜீவை கொலை செஞ்ச விடுதலைப் புலிகளை இன்றும் என்றும் ஆதரிப்பேன்னு சொல்றவர் வைகோ..
அதோட ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொலை செஞ்சதே சோனியாதான்னு சொல்றாரு வைகோ..
அப்படிப்பவரோட நாடாளுமன்ற உரைகள் நூலை தலைவர் ராகுல் காந்தி வெளியிடுறதை நாங்க யாருமே விரும்பலை.. இதைத்தான் ராகுல் காந்திக்கும் சொல்லி இருக்கிறோம்.. எங்க எதிர்ப்பை சொல்லிட்டோம்.. ஹைகமாண்ட்தான் முடிவெடுக்கனும் பாஸ்”ன்னு சொல்றாங்க ப்ரோ..
ஆனால் ராகுல் காந்தியோ, இதை எல்லாம் பெருசா கண்டுக்கலையாம்.. ராகுல் காந்தி, ப.சிதம்பரம் எல்லாம் வைகோவோட புத்தக வெளியீட்டு விழாவுக்கு போறதுன்னு முடிவில இருக்கிறாங்களாம்.
ஓஹோ.. அடுத்து கண்ணிவெடியில சிக்கினது யாருங்க ப்ரோ?
எலக்ஷனுக்கு பின்னாடி தவெக இணைந்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்தான்.. எலக்ஷனுக்கு முன்னாடி தவெகவில இணைந்த செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் எல்லாருக்குமே நல்ல போஸ்டிங், நல்ல மரியாதை இருக்கு..

ஆனா எலக்ஷனுக்கு பின்னாடி தவெகவில இணைஞ்ச மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா, கரூர்- விராலிமலை விஜயபாஸ்கர்கள், உடுமலை ராதாகிருஷ்ணன், எம். சி. சம்பத், வெல்லமண்டி நடராஜன், புதுச்சேரி சாமிநாதன், விஜயதாரணின்னு பலரும் ரொம்பவே அப்செட்டாம்.. திராட்டுல விட்ட கதையா நிற்கிறாங்களாம்..

இதை பத்தி ‘விஜயபாஸ்கர்’களுக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “சிஎம் விஜய்யை நம்பி அதிமுகவை விட்டு, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு தவெகவில இணைஞ்சுட்டாங்க.. எங்களை மாதிரி ஆதரவாளர்களையும் தவெகவில இணைச்சுட்டாங்க.. ஆனாலும் அவங்களுக்கு இன்னமும் எந்த பதவியும் கொடுக்கலை.. இருந்தாலும் எப்படியாவது ஏதாவது பதவி வாங்கனும்னு தீவிரமா இருக்கிறாங்க..
விராலிமலையில பிரியாணி விருந்து தொடங்கி தவெகவினரை அமைச்சர்களை ‘செம்மையா’ கவனிக்கிறார் விஜயபாஸ்கர்.. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கூட ‘நல்லா’ கவனிக்கிறார்.. ஆனால் கட்சி பதவிதான் கிடைக்கலை..”ன்னு புலம்பல் அதிகமா இருக்குதுங்க ப்ரோ.
இதை பத்தி தவெகவில விசாரிச்சப்ப, “எலக்ஷனுக்கு பின்னாடி கட்சியில சேர்ந்தவங்களுக்கு இப்போதைக்கு பதவி கொடுக்கிறது இல்லைன்னு சிஎம் விஜய் முடிவு செஞ்சிருக்கிறாரு.. கட்சிக்காக 3,4 வருஷம் உழைக்கட்டும்… உள்ளாட்சி எலக்ஷன்ல ஒர்க் பண்ணட்டும்.. அப்புறமா அவங்களுக்கு என்ன செய்யனுமோ ஒவ்வொன்னா கொடுப்போம்.. இப்ப என்ன அவசரம்?”னு ஓரங்கட்டிவிட்டாரு.. அதனால அவங்க எல்லாம் கொஞ்ச வருஷத்துக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

ஆஹா.. அடுத்த விக்கெட் யாராம்?
சிஎம் விஜய்தான்.. ஆகஸ்ட் 5-ந் தேதி விஜய் ‘சர்க்கார்’-ன் முதல் பட்ஜெட் தாக்கலாகுது.. அதுக்காக தலைமை செயலகத்துல காலையில ஆரம்பிக்கிற மீட்டிங், நைட் 9 மணி வரைக்கும் கூட நடந்துகிட்டு இருக்குது..
சீப் செக்ரட்டரி, நிதித் துறை செயலாளர், ஒவ்வொரு துறையோட எம்.டி.க்கள், கமிஷனர்கள்னு எல்லா டிபார்ட்மெண்ட் மீட்டிங்கும் ஜரூரா நடக்குது..
சிஎம் விஜய்யும் அப்பப்ப இந்த டிஸ்கஷன்ல கலந்துக்கிறாரு.. இதை பத்தி கோட்டை அதிகாரிகள்கிட்ட கேட்டப்ப, “சிஎம் விஜய்யைப் பொறுத்தவரைக்கும் முதல் பட்ஜெட்.. நல்ல பட்ஜெட்டா கொடுக்கனும்.. தமிழக மக்கள்கிட்ட ரொம்பவே நம்பிக்கை தரக் கூடிய பட்ஜெட்டா இருக்கனும் ஆர்வமா இருக்கிறாரு..
ஆனா சில நேரங்களில் டென்ஷனாகிடுறாரு.. இந்த பட்ஜெட்டுல, ”தேர்தல் வாக்குறுதிகளை” நிறைவேற்றுகிற மாதிரி பெண்களுக்கு ரூ.2,500; வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000..அறிவிப்புகள் இருக்கனும்னு விடாப்பிடியா சொல்றாரு..
ஆனா நிதித்துறை செயலாளர் தரப்பிலோ, ”இதெல்லாம் செயல்படுத்த ஃப்ண்ட் இல்லைங்க சார்.. நம்ம கவர்மெண்ட் வந்த 75 நாட்களிலேயே ரூ.20,881 கோடி கடனும் வாங்கிட்டோம்.. அதனால இந்த பட்ஜெட்டுல இந்த திட்டங்களை எல்லாம் அறிவிக்கிறது ரொம்ப கஷ்டம்” சொல்ல சொல்ல.. ரொம்பவே டென்ஷனாகிடுறாரு சிஎம் விஜய்.
இதுக்கு அடுத்ததா, இந்த இக்கட்டான நிலைமையை மக்கள்கிட்ட எப்படி சொல்றது? மக்களுக்கு புரியறமாதிரி சொல்லனும்னேதான் கவர்மெண்ட் வேற ஒரு ஆக்ஷனில் இறங்கி இருக்கு..
அந்த ஆக்ஷனில் ஒன்னுதான் திமுக மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட 41 இடங்களில் விஜிலென்ஸ் இன்னைக்கு நடத்துன ரெய்டு..


செந்தில் பாலாஜி மேல ஏற்கனவே பண மோசடி வழக்கு, டாஸ்மாக் முறைகேடு வழக்கு, மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்குன்னு இருக்கு.. சிபிஐ, அமலாக்கத்துறை இதுல விசாரணை நடத்திகிட்டு இருக்கு.. இதுல இப்ப மறுபடியும் விஜிலென்ஸ் ரெய்டு இன்னைக்கு நடக்குது..
அதாவது டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் இருந்து ‘பார்ட்டி பண்ட்’ வசூல் செஞ்சாரு செந்தில் பாலாஜி.. அப்படிங்கிற குற்றச்சாட்டோட விஜிலென்ஸ் ரெய்டு நடக்குது…


செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் ரெய்டு நடக்கலை.. மதுபான தயாரிப்பு ஆலைகளிலும் நடக்குது..
திமுக சீனியர் லீடர் டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான மன்னார்குடி கர்ணாவூரில் உள்ள கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலையிலும் காலையில இருந்து ரெய்டு போய்கிட்டு இருக்கு..
இதுக்கும் பட்ஜெட்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்கதானே..
தேர்தல் அறிக்கையில சொன்னபடி வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியலைன்னு சட்டசபையில சிஎம் விஜய் பேசும் போது, ’பார்ட்டி பண்ட்’ அப்படிங்கிற பேருல அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் போன திமுக ஆட்சியில இருந்தவங்க சுருட்டிகிட்டு வீட்டுக்கு கொண்டு போயிட்டாங்க.. அதுக்குதான் இப்ப கூட ரெய்டு நடந்துகிட்டு இருக்கு..
இதை எல்லாம் சரி செய்ய, கவர்மெண்ட் வருவாயை அதிகப்படுத்த பொருளாதார வல்லுநர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் நல்ல குழுவையும் போட்டிருக்கிறோம்.. அவங்களும் நமக்கு அட்வைஸ் தருவாங்க.. அவங்க சொல்ற ஆலோசனைகளையும் வெச்சு நிதிநிலைமையை சீக்கிரமா சரி செஞ்சுடுவோம்.. மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்”னு பேசி சமாளிச்சுடலாம் நினைக்கிறாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ…
பட்ஜெட்டுல செம்மையான அறிவிப்புன்னு வரும்னு மக்கள் அங்கிட்டு காத்திருக்காங்க.. இங்கிட்டு ‘பண்ட்’ பிரச்சனையில அரசாங்கம் அல்லாடிகிட்டு இருக்கு.. ஆகஸ்ட் 5-ந் தேதி என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம் ப்ரோ என்றபடி டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
