டெல்லியில் ஆகஸ்ட் 4-ந் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் (Vijay), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) பங்கேற்கின்றனர்.
சென்னையில் நேற்று ஜூலை 25-ந் தேதி தவெக தோழமை கட்சிகள் பங்கேற்ற நீட் தேர்வுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக துணை பொதுச்செயலாளர் அமைச்சர் வன்னி அரசு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், “டெல்லியில் ஆகஸ்ட் 4-ந் தேதி வைகோவின் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிடுகிறார்; தமிழக முதல்வர் விஜய் அந்த புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார். தலைநகர் டெல்லியில் புதிய சரித்திரம் எழுதப்பட இருக்கிறது. அந்த விழா வெற்றி பெற தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில்- மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
வைகோ நாடாளுமன்ற உரைகள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் விஜய்யை ஜூன் 17-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “30 ஆண்டுகாலமாக நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை ஆறு பகுதிகளாக நான் தொகுத்திருக்கிறேன். அந்தத் தொகுதிகளை வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று டெல்லியில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். அந்த விழாவிலே, நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள வேண்டும்; அந்த புத்தகத்தின் முதல் பிரதியை, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அவரிடம் அனுமதி கேட்க வேண்டும். நம்முடைய முதலமைச்சர் விஜய் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் ஒப்புதல் தந்திருக்கிறார்” என்றார். ஆனால் தற்போது வைகோவின் நூலை ராகுல் காந்தி வெளியிட இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
