புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகளும் அக்கட்சியின் முன்னாள் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
பாமகவில் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. அந்த நிலையில் ராமதாஸ், மகள் ஸ்ரீகாந்தியை பாமகவின் செயல் தலைவராக அறிவித்தார்.
தற்போது ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் அரசியலை விட்டே விலகுவதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமது 88-வது பிறந்த நாளான நேற்று, அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.
ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்ட நேற்று, அவரது மகள் ஸ்ரீகாந்தி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மகன் முகுந்தனுடன் சந்தித்தார். என்.ஆர். காங்கிரஸில் இருவரும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ரங்கசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
தமது என்.ஆர். காங்கிரஸை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை ரங்கசாமி மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஸ்ரீகாந்தியின் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
