காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 3-ந் தேதி முதல்வர் விஜய் (CM Vijay) பெங்களூரு செல்வது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் முரண்பட்ட தகவல்களை தெரிவிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என முதல்வர் விஜய், கர்நாடகா அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதனடிப்படையில் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூருவில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை உறுதி செய்த தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத், “தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் விஜய் பெங்களூர் செல்கிறார்” என உறுதி செய்திருந்தார்.
ஆனால் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாநிலம் விட்டு மாநிலமோ தேசிய பிரச்சனைக்கோ நதிநீர் பிரச்சனைக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும் முதல்வர் அவர்கள் மட்டும்தான் சொல்வார். அவரைத் தவிர வேறு யார் சொன்னாலும் அது அதிகாரப்பூர்வமானது இல்லை. அதை நன்கு பேசி ஆலோசனை செய்து மாண்புமிகு முதல்வர் அவர்களே அதை அறிவிப்பார். மற்றபடி அது உறுதியான தகவல் இல்லை” என்றார்.
இதேபோல சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, “முதல்வர் அலுவலகத்தில் இருந்தோ முதல்வரிடம் இருந்தோ இதுவரை பெங்களூர் செல்வது தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்திக் குறிப்பு எதுவும் வரவில்லை” என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதால் முதல்வர் விஜய்யின் பெங்களூரு பயணம் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
