பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகர் சரத்குமாரின் பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் நேற்று ஜூலை 25-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்றது கவனம் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: என் அண்ணன் சரத்குமார் ஒரு கொள்கையை ஏற்று ஒரு அரசியல் கட்சியை சார்ந்து இருக்கலாம்; என்னுடைய மாமா நயினார் நாகேந்திரன் ஒரு கொள்கை ஏற்று ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கலாம்; என்னுடைய அன்புச் சகோதரன் தனியரசு ஒரு கொள்கையை ஏற்று ஒரு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கலாம்; நாங்கள் ஒரு கொள்கையை முன்வைத்து ஒரு அரசியல் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கலாம். அரசியல் நிலைப்பாடு, கொள்கை கோட்பாடு வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் நாங்கள் எல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள், தமிழ் தாயின் பிள்ளைகள் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

”ஒரே ரத்தம்”
அரசியல் கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள் என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. சரத்குமார், சீமான், தனியரசு மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அனைவரும் ”ஒரே ரத்தத்தின் பிள்ளைகள்”.
”நாங்கள்” யார் தெரியுமா?
இவர்கள் அனைவரும் தமிழ் மண்ணின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருந்தலைவர்களின் வழிவந்தவர்கள்:
தெய்வத் திருமகன்களின் பேரன்கள்
பெருந்தலைவர் காமராஜரின் வாரிசுகள்
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் வாரிசுகள்
பூலித்தேவன் மற்றும் வீரன் அழகுமுத்துக்கோன் பேரனும் பேத்திகளும்…

இன்று சரி நாளை தவறாகும்
இன்று அதிமுகவில் இருப்பவர் நாளை பாஜகவில் இருக்கலாம் அல்லது வேறு கட்சிகளில் இயங்கலாம். இன்று சரி என்று படுவது நாளை தவறென்று தோன்றும்; நாளை தவறு என்று படுவது அடுத்து சரி என்று படும், இதுதான் அறிவு மற்றும் பகுத்தறிவு.
பட்டறிவுதான் மேலானது
ஒன்றாம் வகுப்பு பாடத்தையே ஒருவன் வாழ்நாள் முழுக்க படித்துக் கொண்டிருந்தால் அதுக்கு பெயர் படிப்பு இல்ல… ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று தோன்றும், இன்று சரி என்றுபடுவது நாளை தவறு என்று தோன்றும், ஏனென்றால் கற்றறிவை விட பட்டறிவு மேலானது.
வரிசையில் நின்று வாக்கு செலுத்துவது மட்டுமல்ல அரசியல், மாறாக வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அரசியல் என்ற புரிதலோடு தம்பி தங்கைகள் அரசியலுக்கு வர வேண்டும்.
நாங்கள் தேர்தலில் தோற்று இருக்கலாம், ஆனால் கொள்கை கோட்பாட்டில் எங்களை விட உறுதியானவர்கள் வெற்றி கொண்டவர்கள் இந்த நிலத்தில் யாரும் இல்லை; சரியானதின் பக்கம் நிற்கிற உங்கள் பிள்ளைகள் நாங்கள் வென்றே தீருவோம். இவ்வாறு சீமான் பேசினார்.

பாஜக மேடையில் சீமான் இருந்திருந்தால்..
இந்நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இந்த மேடை எவ்வளவு அழகா இருக்கு பாத்தீங்களா… மாப்பிள்ளை சீமான் உள்பட எல்லாரும் இங்க இருக்கறாங்க. ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னால அந்த மேடை இதே மாதிரி இருந்தா நிலைமை என்ன ஆயிருக்கும்? பார்ப்போம் இனிமேல் எப்படி வருதுன்னு பார்க்கலாம்.
இந்த நாட்டிற்காக, தமிழுக்காக, தமிழ் ஈழத்திற்காக செந்தமிழன் சீமான் பேசிய வார்த்தைகள் எல்லாம் எத்தனை ஆயிரம்… தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்களா?
முதல்வர் விஜய் மீது தாக்கு
சில பேர்கள் இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சராக வந்துவிடுகிறார்கள். ஆனால் முதலமைச்சருடைய முழு தகுதியும் சரத்குமாருக்கு இருக்கிறது. இறைவன் சில நேரத்தில் வைக்கக்கூடாத இடத்தில் சில பேரை வைத்து விடுவான். அதற்கான காலகட்டம் இப்பொழுது கலிகாலம்… இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.
