“கடலில் வீசிவிடுவோம்” – பிரகாஷ் ராஜுக்கு பாஜக மிரட்டல்!

Published On:

| By Kavi

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடியை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இவர்களது போராட்டம் எதிரொலியாக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உடுப்பியில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ யாஷ்பால் சுவர்ணா, பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் பேசுகையில்,”வெளிநாட்டு நிதியுடன் இந்தியாவில் வன்முறையை தூண்ட காக்ரோச் ஜனதா கட்சியினர் முயற்சிக்கின்றனர். போராட்டக்காரர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல. அவர்களின் பின்னணியை சரி பார்க்க வேண்டும். அப்போது உண்மை தெரிந்து விடும். இதுபோன்ற அரசியல் தொடர்ந்தால் பாஜக தொண்டர்கள் தகுந்த முறையில் பதிலடி கொடுப்பார்கள்” என்று கூறினார்.

ADVERTISEMENT

பிரகாஷ்ராஜ் குறித்து அவர் பேசுகையில், ‘நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” என்று எச்சரித்துள்ளார். அதாவது கொன்று கடலில் வீசி விடுவோம் என்ற தொனியில் அவர் மிரட்டியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முகங்களுடன் கரப்பான் பூச்சி படங்கள் ஒட்டப்பட்ட விளம்பர பலகைகள் மீது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் உடுப்பி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் பாஜக எம்எல்ஏ மீது புகார் அளித்திருந்தார். அதில்”ராகுல் காந்தியை போதைக்கு அடிமையானவர் என்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் ராகுல் காந்தியின் வம்சத்தையும் ஒப்பிட்டு பேசியிருந்தார் ” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் யாஷ்பால் சுவர்ணா மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share