‘தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய நாகரிகம்… வந்தே மாதரம் மசோதாவில் பாஜகவுக்கு இல்லை!’ – ஆ.ராசா சாடல்!

Published On:

| By Kavi

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தேசிய பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு, திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி.ஆ.ராசா, “வந்தே மாதரம் பாடலுக்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற பணிகளுக்கான பிசினஸ் திட்ட அறிவிப்பில் குறிப்பிடாமல் திடீரென மூன்று மணிக்கு கொண்டு வந்தனர். அதாவது சப்ளிமெண்ட்ரி எனப்படும் துணை பட்டியலில் கொண்டு வந்தனர். 

நான் ஏற்கனவே இதற்கு ஒரு திருத்தம் கொடுத்திருந்தேன். 

ADVERTISEMENT

இதில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. இவர்கள் கொண்டு வந்த சட்டத்தில் வந்தே மாதரம் பாடல் 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தலைமையில் தேசிய பாடலாக ஒப்புக்கொள்ளப்பட்டது என்பது உண்மை. 

ஆனால் இந்த மசோதாவில் என்ன சொல்கிறார்கள் என்றால், பங்கிம்  சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்குரிய, மரியாதையை தர வேண்டும். அதை தரவில்லை என்றால் குற்றம், சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

ADVERTISEMENT

 பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட பாடலை பாடவில்லை என்றால் தவறு என்று சொல்கிறார்கள். இதற்கு, ராஜேந்திர பிரசாத்தும், அரசியல் நிர்ணய சபையும் ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். 

இது மிகப்பெரிய பொய். 

அரசியல் நிர்ணய சபையில் வந்தே மாதரம் பாடல் தேசிய பாடலாக ஒப்புக்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் எதை ஒப்புக் கொண்டார்கள் என்றால், அதில் நான்கு பத்தி இருக்கிறது. முதல் இரண்டு பத்தி தேசியத்தைப் பற்றியது. 

மீதமுள்ள இரண்டு பத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இது 1930 லேயே பிரச்சனையாகி 1935, 1937 ஆம் ஆண்டுகளில் கடைசியாக ராஜேந்திர பிரசாத், தாகூர், சுபாஷ் சந்திர போஸ், பண்டிதர் நேரு, மகாத்மா காந்தி மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டோர் கூடி முடிவு செய்து, இந்தப் பாட்டில் கடைசி இரண்டு பத்தி முஸ்லிம்களுக்கு எதிரானது. இது பாட தகுதியற்றது என்று கூறி காங்கிரஸ் காரிய கமிட்டியில் விட்டுவிட்டனர். 

அன்றைக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியும், அரசியல் நிர்ணய சபையின் செயல்பாடுகளும் ஒன்றுதான். 

அவர்களால் விடப்பட்ட பாடலை தான், தேசிய பாடலாக அரசியல் நிர்ணய சபையில் ராஜேந்திர பிரசாத் முன்மொழிந்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதெல்லாம் விட முக்கியம், கடைசி நாள் அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்ட பாடல் இந்த இரண்டு பத்தி தான். இன்றைக்கும் அரசாங்கத்தின் வெப்சைட்டில்  வந்தே மாதரம் பாடல் என்றால் இந்த இரண்டு பத்தி தான் இருக்கிறது. 

அரசியல் நிர்ணய சபையிலும் இதைத்தான் பாடியிருக்கிறார்கள். பாடினவர்கள் யார் என்றும் இருக்கிறது.

லட்சுமி காந்த் மைத்ரா என்கிற ஒரு அம்மா தான் பாடியிருக்கிறார். 

அரசியல் சட்டமே அரசியல் நிர்ணய சபையில் இருந்து தான் வந்தது. அரசியல் நிர்ணய சபையை தாண்டி நீங்கள் சென்றீர்களானால், நீங்கள் பாடும் பாடல் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. 

ஒருவேளை இந்தப் பாட்டுக்கு ஒருவர் மரியாதை கொடுக்காமல் நீங்கள் தண்டிக்கிறீர்கள் என்றால், அந்த நபர் இது அரசியல் நிர்ணய சபை சொன்ன பாடல் இல்லை. இதற்கு என்னை தண்டிக்க முடியாது என்று வழக்கு போட்டாலோ அல்லது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டமே தவறு, இது அரசியல் நிர்ணய சபைக்கு எதிரானது, ராஜேந்திர பிரசாத் சொன்னதற்கு எதிரானது என்று சொன்னால் என்ன செய்வார்கள். 

இதை நான் சொன்னதும் அரசாங்கம் பதறிப் போய்விட்டது. உடனே அவசர அவசரமாக முடித்து விட்டார்கள். 

மதியம் 2 மணிக்கு நான் திருத்தத்தை கொடுக்கிறேன் 3 மணிக்கு மசோதாவை கொண்டு வந்து முடித்து விட்டார்கள். 

இது அரசியல் சட்டத்தின் மோசடி. இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இதை திமுக சார்பிலும், திமுக தலைவர் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “கலைஞர் மனோன்மணியம் சுந்தரனார் பாடலில் இருந்து நீராரும் கடலுடுத்த பாடலை கொண்டு வந்தார். இந்தப் பாடலின் இடையில், ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து’ என்று வருகிறது.

ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து என்கிற வாசகம் உண்மைதான். ஆரியம் இன்றைக்கு இல்லை.. சமஸ்கிருதம் இல்லை. 

ஆனாலும் கூட கலைஞர் நாகரிகமானவர், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ் பாடலைக் கொண்டு வரும்போது, ‘இது ஆரியர்களுக்கு எதிராக இருக்கிறது. இது ஒரு சமுதாயத்துக்கு எதிராக இருக்கிறது. சமஸ்கிருதத்துக்கு எதிராக இருக்கிறது. அதை ஏன் செத்துப்போன மொழி என்று சொல்ல வேண்டும். அது செத்துப் போயிருந்தாலும் கூட நாம் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது யாரையாவது புண்படுத்தும் என்ற நாகரிகம் கலைஞருக்கும் திமுகவுக்கும் இருந்தது. 

அதனால்தான் நீராரும் கடலுடுத்த பாடலில் ’ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து’ என்ற வரியை எடுத்துவிட்டு தான் பாடுகிறோம். இதைக் கொண்டு வந்தது கலைஞர். திமுகவுக்கு நாகரிகம் பண்பாடு எல்லாம் இருந்தது. 

நீராரும் கடலுடுத்த பாடலில் எப்படி ஒரு மொழி, இனம் அழிந்து ஒழிந்தது என்று சொல்கிறோமோ இப்போது முஸ்லிம் அழிய வேண்டும் என்று சொல்கிறீர்கள். 

அவர்கள் கெட்டவர்கள் என்று சொல்கிறீர்கள். அந்த இரண்டு வரியை எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. 

இதுதான் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான பிரச்சனை. 

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக, முழுமையாக இந்துமயமாக்க வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share