நீட்- சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

Published On:

| By Mathi

"Abolish NEET Exam": Indefinite hunger strike in Chennai enters 2nd day

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சென்னையில் இன்று 2-வது நாளாக நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ”நீட் தேர்வை நியாயமாக நடத்து” என்ற முழக்கங்களுடன் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் “நீட் தேர்வையே ரத்து செய்” என்ற முழக்கத்துடன் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ADVERTISEMENT

நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த உடன் காக்ரோச் ஜனதா கட்சி தமது போராட்டத்தை திரும்பப் பெற்றது.

ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் தொடருகின்றன. சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ”நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர்” காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு நீட் தேர்வு காவு கொண்ட தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தலைமை வகிக்கிறார். இந்தப் போராட்டத்துக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனிடையே தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பினர் (TSYF) சென்னையில் இன்று ஆகஸ்ட் 2-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, “நீட் விவகாரத்தில் முதல்வர் விஜய் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; நீட் தேர்வு காவு கொண்ட தங்கை அனிதாவுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

மேலும் தமிழ்நாட்டில் நீட் ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share