தரங்கெட்ட அரசு.. ரீல்ஸ் வெறி.. ஜோக்கர் அமைச்சரவை.. ‘டேஷ்’ சிஎம்.. விஜய் மீது உதயநிதி சரமாரி தாக்கு!

Published On:

| By Mathi

Cauvery: Udhayanidhi Stalin Tears Into Vijay

காவிரி பிரச்சனையில் முதல்வர் விஜய் அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவரான திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூரில் காவிரி மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் விஜய் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து இன்று பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

ADVERTISEMENT

இப்போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது அணை கட்டுவதைத் தடுத்தே ஆக வேண்டும்; டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்றைக்கு தஞ்சாவூரில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

வறண்டு போன காவிரி

இன்று ஆடி 18. பொதுவாக இந்த ஆடிப் பெருக்கு நாளில் ஆறு முழுவதும் தண்ணீர் நிறைந்து ஓடும். ஆனால் வருகின்ற வழியெல்லாம் பார்த்தேன், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போலக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இதுவே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்து, நம்முடைய தலைவர் மு.க.டாலின், முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம்முடைய தலைவர் இந்த நிலைமையை ஏற்பட விட்டிருப்பாரா?

இன்றைக்கு குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பா சாகுபடியின் நிலைமை என்னவாகுமோ என்று விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

இது ஏதோ இயல்பாக நடந்த விஷயம் கிடையாது. இன்றைக்கு இருக்கக்கூடிய திறனற்ற ஒரு ‘டம்மி’ முதலமைச்சரால்தான் இந்த அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில்..

2021-லிருந்து 2025 வரை அன்றைய முதலமைச்சரான நம்முடைய தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையைத் தானே சென்று திறந்து வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகளில் ஜூன் 12-க்கு முன்னதாகவே மேட்டூரிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு என்ன நிலைமை?

ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.

அங்கு “தண்ணீர்” வரனும்..

ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்).

இங்குத் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவதற்கு காங்கிரஸின் தயவு தேவைப்படுகிறது. அதனால் கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்கத் துணிவில்லை; எதிர்த்துக் கேள்வி கேட்கவே பயப்படுகிறார்.

பாஜக வார்த்தையே வரலையே..

அதேபோல ஒன்றிய அரசைப் பகைத்துக் கொண்டால் பிரச்சினை வந்துவிடும் என்று அஞ்சுகிறார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகிவிட்டன, இதுவரை அவருடைய வாயிலிருந்து ‘பா.ஜ.க.’ என்ற வார்த்தை வந்ததே இல்லை. அந்தளவிற்குப் பெரிய தைரியசாலி!

அதுமட்டுமல்லாமல், நேற்று மேகதாது பிரச்சினையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்று கூறி தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லிக்குப் போராடச் சென்றார்கள். நம்முடைய விவசாயிகளை மகாராஷ்டிரா காவல்துறை பாதியிலேயே வழிமறித்து, நாக்பூரில் ரயிலை நிறுத்தி, பாதியிலேயே அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்குச் செல்லச் சொல்லிவிட்டார்கள்.

இதைக் கண்டித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிக்கை வெளியிட்டோம். இதைப் பற்றியும் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. ஏன்? மகாராஷ்டிராவில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி. அவர்களை எதிர்த்துப் பேசுவதற்கும் இங்கு இருக்கக்கூடிய முதலமைச்சருக்குத் துணிவில்லை, திராணி இல்லை. அந்த அளவிற்கு விவசாயிகளின் உரிமையை விட முதலமைச்சருக்கு அவருடைய சுயநலமும், ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலமுமே மிக மிக முக்கியமாக உள்ளது.

காவிரி பிரச்சனையில் விஜய்யின் நாடகம்

இப்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பியதும் 2 நாட்களாக ஒரு நாடகத்தை ஆடினார். கர்நாடகா செல்லப் போவதாக பொய்ப் பிரச்சாரம் செய்தார்.

நாம் அனைவரும் சொன்னோம்; நம்முடைய தலைவர் ஸ்டாலின் கூறினார், “தயவுசெய்து கர்நாடகாவுக்குச் செல்லாதீர்கள், இது மிகப்பெரிய சட்டப் போராட்டம்; பல ஆண்டுகளாக, அரை நூற்றாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம்” என்று. திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமன்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறினோம்; அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளும்கூட கர்நாடகாவுக்குச் செல்லத் தேவையில்லை என்று கூறின.

அதையெல்லாம் அவர் கேட்கவில்லை. ஆனால் கர்நாடக முதலமைச்சரே, “தயவுசெய்து இந்தப் பக்கம் வந்துவிடாதீர்கள், உங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது” என்று கூறிய பிறகே அமைதியானார்.

இவர் கர்நாடக முதலமைச்சரைப் பார்ப்பது இருக்கட்டும், முதலில் நம் ஊர் விவசாயிகளை, உங்களைப் பார்த்தாரா? உங்களுடைய கோரிக்கைகளைக் கேட்டாரா? முதலில் என்ன செய்திருக்க வேண்டும்? நம்முடைய விவசாயிகளை வரவழைத்து அவர்களுடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்திருக்க வேண்டும். அதை இந்த முதலமைச்சர் செய்யவில்லை.

அரசுதான் எங்களைக் கூப்பிடவில்லை, நாங்களே சென்று முதலமைச்சரைப் பார்த்துப் பேசுகிறோம் என்று விவசாயிகள் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். ஆனால் அந்த விவசாயிகளையும் குண்டு கட்டாக கைது செய்த அரசுதான் இந்த குதிரை பேர அரசு. அந்த அளவிற்கு விவசாயிகள் மீது இந்த முதலமைச்சருக்கு ஒரு வன்மம்.

தவெக அரசின் ”அடேங்கப்பா” அமைச்சர்கள்

முதலமைச்சர் தான் இப்படியென்றால், நீர்வளத்துறைக்கு ஓர் அமைச்சர் இருக்கிறார். இப்படி ஓர் அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே திருடனைப் போல ஓடுகிறார், தலைதெறிக்க ஓடுகிறார். எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வதில்லை.

வேளாண்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? வேளாண் பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு திருப்பதிக்குச் சென்று பூஜை போட்டுக்கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இந்த அரசின் லட்சணம், இங்குள்ள அமைச்சர்களின் லட்சணம்.

எந்த மாதிரியான அமைச்சர்கள் அமைந்திருக்கிறார்கள்?

  • திருட்டு லாட்டரி விற்கிற ஓர் அமைச்சர்
  • திருட்டு வி.சி.டி விற்கிற ஓர் அமைச்சர்
  • பிளாக் டிக்கெட் விற்கிற ஓர் அமைச்சர்
  • உருட்டுக் கட்டையோடு சுற்றித் திரிகின்ற ஓர் அமைச்சர்
  • எல்லாவற்றிற்கும் மேலாகப் போதைப் பவுடர் அமைச்சர்

இப்படி மொத்த அமைச்சரவையுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

ரீல்ஸ் வெறியில் தமிழக அரசு

இந்த ஆட்சியில் முதலமைச்சர் ‘ரீல்ஸ்’ போடுகிறார், அமைச்சர்கள் ‘ரீல்ஸ்’ போடுகிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி, மருத்துவமனை, ஏன் கழிவறையைக் கூட விட்டு வைப்பதில்லை; உள்ளே சென்று ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

2 நாட்களாக நீங்கள் பார்த்திருப்பீர்கள், 2 அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்குச் சென்று, அங்கிருக்கும் குழந்தைகளை வெளியே வரச்சொல்லி, தங்களுடைய கட்சியின் பெயரை கோஷம் போடச் சொல்லி அதை ‘ரீல்ஸ்’ எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோல ஒரு கேடுகெட்ட ஆட்சியைத் தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை.

சென்ற மாதம் தொலைக்காட்சிச் செய்திகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தென்காசிக்கு அருகில் ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. அங்கு சென்ற தவெகவைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் ஒரு மாவட்டச் செயலாளர் என்ன செய்தார் தெரியுமா?

4 கேமராக்களை எடுத்துச் சென்று படம்பிடித்து, பின்னணி இசை சேர்த்து, ‘ரீல்ஸ்’ போடுகிறார். இப்படி ‘ரீல்ஸ்’ போடும் ஓர் அரசை தமிழ்நாடு அல்ல, இந்தியாவே இதுவரை பார்த்தது கிடையாது.

அமைச்சர்கள் மட்டுமன்றி, அமைச்சருடைய சொந்தக்காரர்கள், அண்ணன், தம்பிகள் கூட ஆய்வுக்குச் செல்கிறார்கள். அரசு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.. யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என்று யாருக்குமே புரியவில்லை. ஆம், முதலமைச்சருக்கும் தெரியவில்லை. அந்த அளவிற்கு ‘ரீல்ஸ்’ வெறி முற்றிப்போயிருக்கிறது இந்த அரசுக்கு.

இன்றைக்கு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சினிமா திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்துவிட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினசரி 3,500 கன அடி தண்ணீர், அதாவது சுமார் 4 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பிக்கிறது. அதன்படி பார்த்தால் நமக்குக் கடந்த 2 மாதங்களில் 42 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 4 டி.எம்.சி-தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதையும் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

திமுக வழக்கு

இதைப் பற்றியெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லை, ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தால் சும்மா இருக்க முடியுமா? அதனால்தான் இன்றைக்கு விவசாயிகளுக்காக மக்கள் மன்றத்தில் இந்தப் போராட்டத்தை நடத்துவது போல, உச்சநீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நம்முடைய தலைவர் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் நம்முடைய தலைவர் வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஓர் அமைச்சர் நேற்று கேட்கிறார், “திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது வழக்கு தொடுத்திருக்கிறதே, கடந்த 5 ஆண்டுகளாக ஏன் வழக்கு தொடுக்கவில்லை?” என்று. இப்படி ஓர் அறிவாளி அமைச்சரை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா?

எதற்கு வழக்கு தொடுக்க வேண்டும்? 5 ஆண்டுகளாகத் தண்ணீர் ஒழுங்காக வந்துகொண்டிருந்தது, அதனால் வழக்கு தொடுக்கவில்லை. இப்போது தண்ணீர் வரவில்லை, வழக்கு தொடுப்பதற்கான வக்கு உங்களுக்கு இல்லை, அதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகமாகிய நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

தினமும் மாலை 4 மணிக்கு விஜய்யின் ரீல்ஸ் ரிலீஸ்

எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்களும், நம்முடைய தலைவரும் விவசாயிகளுக்காக இவ்வளவு செய்துகொண்டிருக்கிறோம். ஒரு பிரச்சினை என்று வந்தால் அதற்குத் தீர்வு காண்பதுதான் ஒரு நல்ல அரசின் அழகாகும். அதை இந்த அரசு செய்கிறதா? அதற்கு மாறாக என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அதிலிருந்து மக்களை எப்படி திசைதிருப்புவது என்றுதான் தினமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தினமும் மாலை 4 மணிக்கு ஏதேனும் ஒரு ‘ரீல்ஸ்’. தினமும் திசைதிருப்பும் வேலையை முதலமைச்சர் செய்துகொண்டிருக்கிறார்.

2 நாட்களுக்கு முன்பு இந்த காவிரிப் பிரச்சினையை எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் என்ன செய்கிறார்?

நம் ஆட்சியில் நாம் கட்டிய 101 அடி மெட்ரோ ரயில் பாலத்தை இவர் சென்று ஆய்வு செய்கிறார். அப்புறம் நாம் கொண்டுவந்த சென்னை மெட்ரோ ரயிலில் இவர் பயணம் செய்து ‘ரீல்ஸ்’ போடுகிறார்.

இன்றைக்கு இதேபோல நம்முடைய ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று தெரிந்ததும், இதை திசை திருப்புவதற்காகக் காஞ்சிபுரத்தில் சிப்காட்டிற்கு ஆய்வுக்குச் செல்கிறார். அதுவும் பார்த்தீர்கள் என்றால், நம் தலைவர் ஆட்சியில் நாம் கொண்டுவந்த ‘செயின்ட் கோபைன்’ தொழிற்சாலையில் சென்று ஆய்வு செய்கிறார்.

ஆய்வு செய்பவர் சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து, அதைச் செயல்படுத்தி, அதை ஆய்வு செய்தால் அது நல்லது, பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் தொடர்ந்து நம்முடைய தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது என்னென்ன திட்டங்களையெல்லாம் தொடங்கி வைத்தாரோ, அந்தத் திட்டங்களையெல்லாம் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.

நான் ஒரு ‘மீம்’ (Memes) கூட பார்த்தேன். இவர் மெட்ரோ ரயிலில் சென்று ஆய்வு செய்கிறார், 101 அடி உயரத்திலிருந்து பார்க்கும்போது சென்னை முழுவதுமுள்ள அத்தனை திட்டங்களும் தெரிகின்றன. அவருடைய மைண்ட் வாய்ஸ், “ஏனப்பா எனக்கு ஓட்டு போட்டீர்கள்? இவ்வளவு செய்து வைத்திருக்கிறார்களே தமிழ்நாட்டிற்கும் சென்னைக்கும்” என்று பேசுவது போல ஒரு ‘மீம்’ பார்த்தேன்.

”டேஷ் போட்டு” பேசும் ஒரே முதல்வர்

இன்னும் முதலமைச்சருக்குப் புரிகிற மாதிரி சொல்லவேண்டுமென்றால், “ஊரான் வீட்டு நெய்யில் தன் வீட்டிற்குச் இனிப்பு செய்துகொண்டிருக்கிறார்.”

அவர் பாணியில் சொன்னால்தான் அவருக்குப் புரியும். அவர் பாணி என்னவென்று உங்களுக்குப் புரியும்.. டேஷ் போட்டு பேசும் முதலமைச்சர்!

இன்றைக்கு இந்தியா முழுதும் பேசுகிறது, இப்படி ஒரு முதலமைச்சரை நாங்கள் பார்த்ததே இல்லை என்று. எதற்கு எடுத்தாலும் கொத்து பரோட்டா போடுவேன் என்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது என்ன சொன்னார்? “அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் விவசாயியாகப் பிறக்க வேண்டும்” என்று சொன்னாரா இல்லையா?

சரி, நான் கேட்கிறேன், இதற்கு எதற்கு அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டும்? வாருங்கள்! இந்தப் பிறவியிலேயே விவசாயம் செய்யலாமே, யார் எப்போது நினைத்தாலும் விவசாயம் செய்யலாம்.

தரங்கெட்ட தவெக ஆட்சி

நான் சொல்கிறேன், மே 10-ந் தேதியிலிருந்து இந்தத் தரங்கெட்ட ஆட்சி அமைந்ததிலிருந்து அதிக ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பது நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள்தான்.

தேர்தல் வாக்குறுதியில் வேறு என்னவெல்லாம் சொன்னார்? என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்?

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொன்னாரா இல்லையா?

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே என்ன சொன்னார்? 50,000 ரூபாய்க்குள் கடன் வாங்கியிருந்தால் மட்டும்தான் பயிர்க்கடன் தள்ளுபடி என்றார். உடனே நம்முடைய தலைவர் ஸ்டாலின், எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் மாற்றினார்கள்.

50,000 என்பதை 75,000 ரூபாய் என்று மாற்றினார்கள். ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா? வெறும் 35,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் தள்ளுபடி இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

வாக்குறுதியில் சொன்னது ஒன்று, அறிவிப்பில் சொன்னது வேறொன்று, ஆனால் செயல்படுத்துவது முற்றிலும் வேறொன்று! இப்படி வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற முடியாமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் ஆட்சிதான் இன்று அமைந்திருக்கக்கூடிய இந்த தவெக அரசு.

இதுவே 2006-இல் திமுக ஆட்சி அமைந்தபோது கலைஞர் அவர்கள் தான் சொன்னபடி 7,000 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார். அதை எப்படிச் செய்தார்? அவர் முதலமைச்சராகப் பதவியேற்கும் அந்த மேடையிலேயே கோப்புகளைக் கொண்டுவரச் செய்து அங்கேயே கையெழுத்திட்டார்.

சென்ற ஆட்சியில் நம் தலைவர் ஸ்டாலின் 12,000 கோடி ரூபாய் அளவிற்குப் பயிர் கடன் தள்ளுபடி செய்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் இன்றைக்கு முழுப் பயிர்க் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தீர்கள்.

ஆனால் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா? “தி.மு.க-வின் தூண்டுதலால் தான் இன்றைக்கு விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்” என்று உங்களுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்தான் இன்றைய முதலமைச்சர் அவர்கள்.

திமுக ஆட்சி நடந்தபோது மேகதாது அண கட்டவிடாமல் நாம் தடுத்தோம், கர்நாடகாவைத் தடுத்தோம்.

விவசாயிகளுக்கு இழப்பு

ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு மிக பலவீனமான ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி மேகதாதுவில் அணை கட்டிவிடலாம் என்று இன்றைக்குக் கர்நாடக அரசு முழு முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இந்த அரசு ‘மேகதாது அணை கூடாது’ என்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது அதை ஆதரித்து நான் பேசினேன்.

மேகதாது பிரச்சினை மிக மிக முக்கியமான ஒரு பிரச்சினை. இது கட்சிகளைக் கடந்து அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டிய பிரச்சினை.

இந்த அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசுக்கு நம்முடைய அழுத்தத்தைக் கொடுப்போம் என்று கூறினேன்.

ஒன்றிய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்போம் என்று சொன்னவுடனேயே ஆட்சியாளர்கள் பயந்துவிட்டார்கள்.

நேற்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரிப் பிரச்சினையில் தங்களுடைய ஒற்றுமையை அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இங்குள்ள இந்த முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதையே மிகவும் ஓர் அவமானமாகக் கருதுகிறார்.

குறுவைச் சாகுபடியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு வெறும் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டும்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 14 லட்சம் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு இன்றைக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆகவேதான் ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் வழங்குங்கள், பயிர்க்காப்பீட்டிற்கான பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும், சம்பா சாகுபடிக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றைக் மானியமாக அரசு வழங்க வேண்டும் என்று நம்முடைய தலைவர் ஸ்டாலின் இந்த அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கைகள் என்ன?

ஆனால் இந்தக் கோரிக்கையையும் ஏற்க இந்த அரசு தயாராக இல்லை. அதனால்தான் இன்றைக்கு வீதிக்கு வந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் இவர்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம்:

  • தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முழுப் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
  • வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
  • அதற்கு மிக மிக முக்கியமாக இந்த டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தாக வேண்டும்

என்று நம்முடைய கோரிக்கையை மீண்டும் இந்த அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

சட்டசபை கூடுது.. காத்திருக்கு கச்சேரி

விவசாயிகள் தொடர்பான இந்தப் பிரச்சினைகளையெல்லாம் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்னும் இரண்டு நாட்களில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது.. சும்மா விடமாட்டோம்!

வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக இந்தப் பிரச்சினையை எழுப்பும்.

சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகளாகிய உங்களுக்கான ஆதரவாக, உங்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் ஒலிக்கும்!

டெல்டா விவசாயிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் பக்கபலமாக இருக்கும்!

காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை என்றென்றும் நிலைநாட்டுவோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share