கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், முதற்கட்டமாக முதுநிலைத் திருக்கோவில்களில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் பாதுகாப்பான செல்போன் வைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஸ்ரீரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 9) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், கோவில்களின் கருவறை வரை செல்போன்கள் கொண்டு செல்லப்பட்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ‘இது ஏற்கனவே அமலில் இருப்பதுதானே’ என்று திரும்பவும் அறிவிப்பதாகச் சிலர் கேலி கிண்டலாகப் பேசுகிறார்கள். ஆனால், ஒரு திட்டம் இருந்தால் அதை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதே முக்கியம். கடந்த கால ஆட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.
இன்றைக்குக் கோவில்களுக்குள் செல்லும்போது வீடியோக்கள் வெளியாவதைக் கட்டுப்படுத்த மிகத் துரிதமாகத் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதற்காகவே நாம் முதலில் முதுநிலைத் திருக்கோவில்களைக் கையில் எடுக்கிறோம். போதிய வருவாயும், இடவசதியும் கொண்ட முதுநிலைத் திருக்கோவில்களில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் செல்போன் வைப்பு மையங்களை (Mobile Counters) அமைக்கச் சொல்லியிருக்கிறோம்.
செப்டம்பர் 1 முதல் தடை:
செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் அனைத்து முதுநிலைத் திருக்கோவில்களிலும் இந்த மையங்கள் அமைத்து முடிக்கப்பட்டவுடன், முதற்கட்டமாகப் பொதுமக்கள் கோவிலுக்குள் செல்போன்களைக் கொண்டு சென்று பயன்படுத்துவதற்கான தடைகளைக் கொண்டு வருகிறோம். பக்தர்கள் தங்களது செல்போன்களை இந்த வைப்பு மையங்களில் கொடுத்துவிடலாம்.
பக்தர்களுக்கு வேண்டுகோள்:
பொதுமக்கள் சாமி கும்பிடக் கோவில்களுக்குச் செல்வது நமது மன அமைதிக்காகவும், மனநிறைவுக்காகவும் தான். அப்படி இருக்கும்போது கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதும் தேவையற்ற ஒன்று. நாம் இறைவனைத் தரிசிக்கச் செல்லும்போது நம் எண்ணங்கள் அனைத்தும் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
ஊடகத்தினர் நினைத்தால், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், பிரபலங்கள் கோவிலுக்கு வரும்போது கோவில் வளாகத்திற்கு வெளியே எவ்வளவு வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம், வீடியோக்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கோவிலுக்குள்ளேயே சென்று அவர்கள் செல்வதையெல்லாம் வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு ஊடக நண்பர்களின் முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.
