அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தவெகவில் மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பற்றி அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதி, விராலிமலை தொகுதி, அறந்தாங்கி தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய தவெகவின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் பர்வேஸ் இருந்து வந்தார்.


இந்நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நேற்று விராலிமலை தொகுதியை மட்டும் உள்ளடக்கிய புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அதேபோல புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியும் சி.விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தவெகவில் ஒரே ஒரு சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பின்னணியில் புதுக்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் பர்வேஸ், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நம்முடைய வளர்ச்சிக்காக தவெகவில் இணைந்துள்ளார்.
மனப்பூர்வமாக, சந்தோஷமாக என்னோட தொகுதியை அவருக்கு நான் கொடுத்திருக்கிறேன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன். எந்த ஒரு அச்சமும் இல்லாமல், எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் விராலிமலை தொகுதியை அவருக்கு கொடுத்திருக்கிறேன்.
இதுபற்றி, எங்கள் தலைவர் கேட்டார்.. உடனே, ”என்னுடைய தொகுதி, அவருடைய தொகுதி. நமக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார்.. அதனால் எந்த தயக்கமும் இல்லாமல், எந்த அச்சமும் இல்லாமல், எந்த சங்கடமும் இல்லாமல், என்னுடைய ஒரு தொகுதியை அவருக்கு கொடுங்கள்” என்று சொன்னேன். மீடியாக்களில்தான் இதை பற்றி பேசுகிறார்கள். நாங்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களாக இருந்தோம்; இப்போது அனைவரும் ஒரே கட்சி, ஒரே கொள்கை என இணைந்து நிற்கிறோம். நம் கட்சிக்கு புதியதாக வந்தவர்களையும் அனைவரும் இணைத்துக் கொண்டு வரக் கூடிய தேர்தல்களில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசினார்.
அமைச்சர் பர்வேஸ் வாழ்த்து
இதனிடையே புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பர்வேஸ், பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
