மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் கார் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் ஹாலிசஹார் காவல் நிலையத்தில் போலீஸ் தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பிர்ஜூ கியோட் கொல்லப்பட்டார். பிர்ஜூவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மமதா பானர்ஜி சென்றார்.
வீடியோ:
பிஜ்பூர் வழியாக மமதா பானர்ஜியின் கார் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் திரண்டிருந்தவர்கள் காரை வழிமறித்தனர். மமதாவின் கார் மீது சேறு, கற்களை சரமாரியாக வீசினர். அப்போது, “சோர்; சோர்” (திருடன்; திருடன்”) என்றும் “கொள்ளையர்களின் ராணியே! திரும்பி போ!” என்றும் முழக்கங்களையும் எழுப்பினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மமதா பானர்ஜி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, “ என் கார் மீது கற்கள், காலணிகள், சேற்றை வாரி வீசினர். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த தாக்குதலில் கார் கதவு மட்டும் திறந்திருந்தால் என் மண்டை உடைந்து நான் மரணம் அடைய நேரிட்டிருக்கும். இத்தனையும் போலீஸ் கண் முன்பே நடந்தது.. இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை..” என்றார்.
