’திரும்பி வந்துட்டேன்னு சொல்’… கொல்கத்தாவை மிரட்டிய மமதா! டெல்லி போராட்டத்தில் இணைவதாக அறிவிப்பு!

Published On:

| By Mathi

Mamata's Bengal Roar—Joining the Delhi Dissent

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் தோல்வி, திரிணாமுல் காங்கிரஸின் செங்குத்து பிளவுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் இன்று ஜூலை 21-ந் தேதி நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸின் தியாகிகள் தின பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி (Mamata) பங்கேற்றார். பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை எதிர்த்துப் போராட ‘இந்தியா’ கூட்டணியின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு எந்த ஈகோவும் இல்லை. மற்றவர்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றாகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

ADVERTISEMENT

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் “துரோகிகள்” எப்போதுமே மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால் நேரடியாக பாஜகவில் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். இப்போதும் சொல்கிறேன்.. பாஜகவின் “பக்கத்துத் தலையணையாக” (Side Pillow) செயல்படுவதை கைவிடுங்கள்.. கட்சியை விட்டு செல்பவர்கள் தாராளமாகப் போகலாம்.. அப்படி காலியாகும் பதவிகளை நிரப்ப என் இளந்த் தொண்டர்கள், மாணவர்கள் தயாராக உள்ளனர்.

நமது கட்சியின் சின்னத்தை எவராலும் பறித்துவிட முடியாது.. நான் வருகிறேன்.. மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உங்களை சந்திக்க வருகிறேன்.

ADVERTISEMENT

இன்றைய தியாகிகள் தினக் கூட்டத்திற்கான மேடை திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை மீதும், மாநில அரசு மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேவைப்பட்டால் டெல்லி போராட்டத்தில் நானும் சென்று பங்கேற்பேன். இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.

ADVERTISEMENT

‘மீண்டும்’ மிரட்டும் மமதா பானர்ஜி

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, ரிதாபிரதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையினோர் மமதாவுக்கு எதிராக தனி குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் வழங்கப்பட்டுவிட்டது.

அதேபோல 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், பாஜகவை ஆதரிப்பதற்காக திரிபுராவின் NCPI கட்சியில் இணைந்துள்ளனர்.

மேலும் 14 ஆண்டுகால திரிணாமுல் ஆட்சியில் நடந்த பல முறைகேடுகளுக்காக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் பொதுமக்கள் முட்டைகளை வீசி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய பெரும் பின்னடைவுக்குப் பின்னர் கொல்கத்தாவில் மிகப் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தி தாம் ‘மீண்டும்’ வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share