”3 மாதங்களுக்கு முன்பு வரை கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டுவிட்டு இப்போது வாயை பூட்டிக் கொள்ளவா முடியும்? கொள்கையை மாற்றிப் பேசுவது மலிவான அரசியல்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார்.
சென்னையில் நேற்று ஆகஸ்ட் 9-ந் தேதி கலைஞர் நினைவுநாள் பொதுக் கூட்டத்தில் ஆளூர் ஷா நவாஸ் பேசியதாவது: மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த அந்த ஆட்சிக்குத்தான் இன்றைக்கு மக்கள் இப்படி ஒரு பாடத்தை கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய பெரிய முடிவுகள் வந்திருக்கின்றன.
ஆனாலும் தோல்வியில் துவண்டு விடுவது அது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசியல் அல்ல; வீறு கொண்டு எழுவதுதான் அவருடைய அரசியல்.
மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவதுதான் அவருடைய அரசியல். மக்களோடு மக்களாக மீண்டும் கரம் கோர்த்து நிற்பதுதான் அவருடைய அரசியல்.
நாம் யாருக்கு செயலாற்றுகிறோமோ அவர்கள் நமக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க கூடாது. நன்றியோடு இருக்க மாட்டார்கள், ஆனாலும் நாம் பணியாற்ற வேண்டும் என்பதுதான் முத்தமிழ அறிஞர் கலைஞர் கற்றுத் தந்த அரசியல். எனவே, அவரை நினைவு கூறுகிற இந்த கூட்டம் என்பதும், அவருடைய நினைவு நாளை கடைபிடிப்பது என்பதும் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காகத்தான்..
இன்றைக்கு ஆட்சி மாறிவிட்டது, காட்சிகள் மாறிவிட்டன, அணிகள் மாற்றம் நடந்துவிட்டது.” ஆட்சி மாறிவிட்டது, காட்சி மாறிவிட்டது, அணி மாற்றம் நடந்துவிட்டது.
ஆனால், அதற்காக எம்மை போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா?
3 மாதத்திற்கு முன்னால் வரை “முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க, அவர் ஆற்றிய பணிகள் இன்னென்ன” என்றெல்லாம் பட்டியல் போட்டு நீட்டி முழங்கிய நாங்கள், இப்போது எங்கள் வாயை பூட்டி வைக்க முடியுமா?

‘திராவிட மாடல்’ இந்தியாவுக்கே ‘ரோல் மாடல்’ என்று சொல்லி மேடைதோறும் முழங்கி இருக்கிறோம், மக்களிடம் போய் பேசியிருக்கிறோம். இல்லை, இல்லை… இப்போது 3 மாதத்தில் அது ‘திராவிட மாடல் அல்ல’ என்று மாற்றி பேச முடியுமா? பேச முடியாது.
பல ஆண்டுகளாக எந்தக் கருத்தை மக்களிடம் சொன்னோமோ, எந்தக் கொள்கையை முன்னிறுத்தினோமோ, எந்தக் கொள்கையின் ஐக்கானாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பார்த்தோமோ, அதை அப்படியே பார்க்கிறோம், அப்படியே தொடர்கிறோம், எந்த மாற்றமும் எங்களிடம் இல்லை.
மாற்றிப் பேச முடியாது. மாற்றி பேசினால் அது மலிவான அரசியலாக போய்விடும். மலிவான அரசியல் செய்ய எமக்குத் தெரியாது, மலிவான அரசியல் செய்ய முடியாது.
ஆதாய அரசியல் செய்ய முடியுமா? 5 ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சி இருந்தது. முதலமைச்சர் உங்களுக்கு நெருக்கமாக இருந்தார், அமைச்சர் பெருமக்கள் நீங்கள் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார்கள். கேட்டதை எல்லாம் என்றால் தனிப்பட்ட முறையில் எதையும் நானும் கேட்கவில்லை, தனிப்பட்ட முறையில் அவரும் எனக்கு எதையும் செய்யவில்லை.
இப்போது ஒரு பட்டியல் போட்டார் அல்லவா? நானும் ஒரு பட்டியல் போட்டேன் அல்லவா? நாகப்பட்டினம் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறோம்? தமிழ்நாடு முழுவதும் நம்முடைய கொள்கைக்கு, நம்முடைய மக்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
அப்படி, 5 ஆண்டு காலம் ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தோம். அதனால் ஆட்சியைப் பாராட்டி பேசினோம். அதனால் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புகழைப் பாடினோம். அதனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை பற்றி பாராட்டி பேசினோம்.
இப்பதான் ஆட்சி மாறிவிட்டது அல்லவா? அப்படியே இப்போது பிளேட்டை மாற்றிடலாம் அல்லவா?
இன்றைக்கு இருக்கிற முதலமைச்சரை பாராட்டி பேசலாம்தானே?
இன்றைக்கு இருக்கிற ஆட்சியை பற்றி புகழ்ந்து பேசலாம்தானே?
ஆதாய அரசியல் தான் எங்களுடைய அரசியல் என்றால், கடந்த 5 ஆண்டுகளும் அதைத்தான் நாங்கள் செய்திருக்க வேண்டும். இப்போது ஆட்சி மாறிவிட்டது, காட்சி மாறிவிட்டது, நாங்களும் மாற்றி பேசி இருக்க வேண்டும். ஆனால், ஆதாய அரசியல் அல்ல எங்கள் அரசியல்.
ஏன் அப்படி மாற்றி பேசாமல், அன்றைக்கு என்ன பேசினோமோ, அதை இன்றைக்கும் பேசுகிறோம் என்றால் நாங்கள் பேசுவது, நாங்கள் உள்வாங்கி இருப்பது கருத்தியல் அரசியல், கொள்கை அரசியல், நாகரீக அரசியல், பண்பாடான அரசியல், முதிர்ச்சியான அரசியல்.
எனவே, அந்த அரசியலை எந்த காலத்திலும் பேசுவோம், எல்லா காலத்திலும் பேசுவோம், தொடர்ந்து பேசுவோம், எங்கும் பேசுவோம். ஏனென்றால் அது பேசித் தீர்க்க வேண்டிய அரசியல்.
நாம அரசியலுக்கு வந்திருக்கிறதே இந்த கொள்கைக்காகத்தான், அரசியலில் இருக்கிறதே இந்த கொள்கைக்காகத்தான். இந்த கொள்கையை விட்டுட்டு எந்த அரசியலை பேச முடியும் நம்ம? எந்த அரசியலை பேச முடியும்?
தேர்தல் வரும், போகும்; வெற்றி வரும், போகும்; அணி இருக்கும், மாறும். அதெல்லாம் தேர்தல் அரசியலில் எந்த உத்தரவாதமும் சொல்ல முடியாது. இன்றைக்கு இருக்கிற அணி இப்படியே இருக்கும்னு சொல்லிவிட முடியுமா? 10 வருஷமா கட்டி காப்பாத்துன அணியே 10 நாள்ல போயிடுச்சு! போச்சா இல்லையா?
10 வருஷமா கட்டி காப்பாற்றிய அணி கொள்கை ரீதியா ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? கொள்கை ரீதியா ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? கொள்கை ரீதியாக மாநில உரிமை சார்ந்து ஏதாவது விட்டுக்கொடுத்தார்களா? பிஜேபியோட ஏதாவது சமரசம் செய்தார்களா? கொள்கை ரீதியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எப்படி ஒரு 10 நாளில், 10 காலம் தொடர்ந்த பல தேர்தல்களாக தொடர்ந்த ஒரு அணி ஒரே ஒரு தேர்தல் பின்னடைவில் இல்லாமல் போச்சு?

அப்ப 10 ஆண்டுகளாக தொடர்ந்த கொள்கை கூட்டணியே பத்த நாளில் காணாமல் போகும் என்றால்…
அப்ப அணிகள் எல்லாம் வந்து எந்த எந்த உத்தரவாதமும் கிடையாது, இந்த அணிதான் நீடிக்கும், இந்த அணிதான் தொடரும். ஆனால் கொள்கை நீடிக்கும், கொள்கை தொடரும்.
கொள்கை நீடிக்க வேண்டும், கொள்கை தொடர வேண்டும். கருத்தியல் அரசியல் தமிழ்நாட்டில் தொடர வேண்டும். கருத்தியல் அரசியல் தான் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது, அந்த அரசியல் தான் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலற்ற அரசியல் ஒரு நாளும் தமிழ்நாட்டை காப்பாற்றாது ஏன்? சம்பந்தப்பட்ட கட்சியை காப்பாற்றாது என்பதற்கு உதாரணம் தான் அதிமுக!
அரசியலற்ற அரசியல் அதிமுகவின் அரசியல் எம்ஜிஆர் வந்தார், இதே மாதிரிதான் ஒரு மிகப்பெரிய பேரெழுச்சி ஏற்பட்டது, தொடர்ந்து ஆட்சியை பிடித்தார். அதற்கு பிறகு அம்மையார் வந்தார், அவரும் வழிநடத்தி ஆட்சியை பிடித்தார். அதிக முறை தமிழ்நாட்டை ஆண்டார்கள். ஆனால் எம்எல்ஏ-க்களை வந்து கட்டி காப்பாற்ற முடிகிறதா பாருங்கள்? ரெசார்ட்டில் அடைச்சு வைக்க வேண்டிய நிலைமைதானே வந்துச்சு?
ஆனால் இந்தியாவிலேயே எனக்கு ரொம்ப வியப்பாக இருக்கிறது ஒரு கட்சிதான் எம்எல்ஏ-க்களை ரெசார்ட்டில் அடைச்சு வைக்கவே இல்லை, அவர்கள் பாட்டுக்கு சுத்துகிறார்கள்! மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது.
ஏனென்றால் கருத்தியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி, எப்படிப்பட்ட அலையடித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாது! கலைஞர் அப்படி கவலைப்படவில்லை. மூன்று முறை தொடர்ந்து எம்ஜிஆர் தான் முதலமைச்சர், கலைஞர் கட்சியை கலைச்சிட்டு போயிட்டாரா? திமுகக்காரங்க எல்லாம் அதிமுக போய் சேர்ந்துட்டாங்களா?
வளர்ச்சியை சொன்னால் எடுபடும், கல்வியை சொன்னால் எடுபடும்! இப்படி சொல்லித்தான் தமிழ்நாட்டை கட்டி காப்பாத்தி வந்திருக்கிறோம்.
எப்படி அது இந்த தேர்தல்ல மாறுச்சு? எப்படி அது மாறியது? இதை ஆய்வு செய்ய வேண்டும், இதை பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். தேர்தல் வெற்றி இரண்டாவது, அது பிரச்சனையே கிடையாது.
ஆனால் தமிழ்நாடு போகிற திசை, அது வளர்ச்சியை நோக்கிய திசையாக இருக்க வேண்டும்! அது பெரியாரிய அம்பேத்கரிய மாக்சிய பாதையில் பயணிக்கிற திசையாக இருக்க வேண்டும். அது கல்வி முன்னேற்றம் என்கிற திசையாக இருக்க வேண்டும்.
அந்த திசையை நோக்கி மீண்டும் தமிழ்நாட்டை கட்டி எழுப்புவோம். இவ்வாறு ஆளூர் ஷா நவாஸ் பேசினார்.
முதல்வர் விஜய்யின் தவெக ஆட்சிக்கு விசிக ஆதரவு தருகிறது; அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் விசிகவின் ஆளூர் ஷா நவாஸ், திமுக மேடையில் பங்கேற்று பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
