அதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அக்கட்சியின் அதிருப்தி அணியை சேர்ந்த எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ, நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி (Agri Krishnamurthy) பதிலடி கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சொல்கின்றனர். 1996-ல் அதிமுக தோல்வி அடைந்த போது ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றார். ஏனெனில் அப்போது, வேட்பாளர்கள் அனைவரையும் தேர்வு செய்தது ஜெயலலிதா.
ஆனால் தற்போதைய தேர்தலில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எஸ்.பி. வேலுமணிதான், வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தார். நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தங்களது மாவட்டங்களுக்குரிய வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தனர்.
மாவட்டச் செயலாளர்களாகவும், முன்னாள் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் குறுநில மன்னர்களைப் போலச் செயல்பட்டனர். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த நபர்களைத்தான் வேட்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். உதாரணமாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னை வேட்பாளராக அறிவித்தார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் செங்கம் தொகுதியில் டி.எஸ். வேலை நான் பரிந்துரைத்ததன் அடிப்படையில் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதான் தமிழகம் முழுவதும் நடந்தது.
அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யத் தேவையான வியூகங்களை வகுத்துச் செயல்பட வேண்டியது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பாகும். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளில் 196 தொகுதிகளுக்கு நேரடியாகவே போய் பிரசாரம் செய்தார். அவருடைய கடுமையான உழைப்பால் தேசிய ஜனநாயக கூட்டணி சுமாராக 1 கோடியே 35 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். அதிமுக தனித்து 47 இடங்களில் வென்றது.
யாருக்கு தார்மீக பொறுப்பு?
ஆகையால் தேர்தல் தோல்விக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அதாவது எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் போன்றோர்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்கள் தோல்வியடைந்ததற்கு அவர்கள் மீதுதான் தார்மீகப் பொறுப்பு உண்டு. தங்கள் குறைகளை மறைக்க எடப்பாடியார் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்.
தவெகவுடன் தொடர்பு- அதிமுகவில் (AIADMK) குழப்பம் ஏற்படுத்த சதி
தேர்தல் தோல்விக்கு எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவர்கள் அனைவருமே தவெகவுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பேசுவது அனைத்தும் அப்பட்டமான பொய். அதிமுகவில் பதவி மட்டும் வேண்டும்.. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் இவர்கள் சந்திக்க மாட்டார்களா? அதிமுக என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு இத்தகைய விமர்சனங்களை பேசிக் கொண்டிருந்தால்எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
