தேர்தலில் இறுமாப்புடன் இருந்து விட்டோம்.. திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி

Published On:

| By Mathi

DMK Ex Minister Moorthy Admits Party's Overconfidence in Elections

சட்டசபை தேர்தல் களத்தில் திமுகவினர் (DMK) இறுமாப்புடன், கவனக் குறைவாக இருந்துவிட்டனர் என்று திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் திமுகவின் சட்டத்துறை சார்பில் தென் மண்டல வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று ஆகஸ்ட் 9-ந் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

தானாக வாய்ப்பு தந்த தவெக

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பேசியதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலுக்குப் பிறகு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு சிறு சோர்வில் நம்முடைய தோழர்கள் சிக்கியிருந்த நேரத்தில், வீறு கொண்டு எழுந்து அத்தனை பேரையும் வீதிக்கு வரவழைத்து, “திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத, அசைக்க முடியாத ஒரு இயக்கம்; இந்த இயக்கம் ஒரு எஃகு கோட்டை” என்பதை நிரூபிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஆளக்கூடிய தமிழக வெற்றிக் கழகம் தானாக நமக்குத் தந்தது.

ஆயிரம் பேர் கூடி, ஆயிரம் பேர் நம்முடைய பொதுக்கூட்டங்கள் நடத்தி, விளக்க உரைகள் நடத்தி, மாநாடுகள் நடத்தி நமக்குக் கிடைக்காத ஒரு எழுச்சியை, நம்முடைய இளைஞரணிச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை ஒரு காலை நேரத்தில் அவர்கள் செய்த அந்த கைது நமக்குத் தந்தது.

ADVERTISEMENT

2001-ல் இதேதான் நடந்தது. நள்ளிரவில் போய் கலைஞரை கைது செய்தார்கள். இந்த நாடே கொந்தளித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அத்தனை பேரும் வீதிக்கு வந்தார்கள். அன்றைக்குத் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களை சிறையில் வைப்பதற்கே கூட இடம் கிடையாது.

மதுரை சிறைச் சாலையின் வெளியே இருக்கக்கூடிய அரசரடி மைதானத்தில் அன்றைக்கு இரவு முழுவதும் கழிக்கக்கூடிய நிலைமை கழகத் தோழர்களுக்கு வந்தது. சப்-ஜெயிலில் வைக்க முடியவில்லை, எந்த இடத்திலும் வைக்க முடியவில்லை, கல்யாண மண்டபத்தில் வைக்க முடியவில்லை. அத்தனை கழகத் தோழர்களும் அன்றைக்குக் களத்திற்கு வந்தார்கள்.

ADVERTISEMENT

அதே போன்ற ஒரு உணர்வை மீண்டும் தட்டி எழுப்பிய நிகழ்வாக இந்த முறை நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கைது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அமைந்தது. இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.

தேர்தல் களத்தில் கவனக் குறைவும் இறுமாப்பும்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: நாமெல்லாம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் களத்தில் அதிமுக கட்சியினரை மட்டுமே எதிர் வேட்பாளராகக் கருதி பணியாற்றினோம். அந்தக் களத்தில் பணியாற்றுகின்ற போது, இன்றைக்கு இருக்கக்கூடிய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எந்தச் சூழ்நிலையில் வந்தார்கள், எப்படி இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்கள் என்பதெல்லாம் நம்முடைய கவனக் குறைவுதான் என்னைப் பொறுத்தவரை.

ஏனென்றால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. எதையுமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு இறுமாப்பில் இருந்துவிட்டோம். “நமக்கு எதிரி அதிமுக தான், தவெக ஏதோ ஒரு ஓட்டு வாங்கும், இப்படித்தான் இருக்கும்” என்று எடுத்துக்கொண்டதன் விளைவு… நாம் முழுமையாகப் பணியாற்றிய போதும், பல்வேறு காரணங்களால் சோர்வு இருந்தது.

“ஏன் நமக்கு வேலை கொடுக்கவில்லையோ, சில விஷயங்களைச் செய்யவில்லையோ” என்ற ஆதங்கம் எல்லா மட்டத்திலும் இருந்தது.

வழக்கறிஞர்களுக்கு அரசு பொறுப்பு

“நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறபோது வேலை வாங்குகிறார்கள், வேலை பார்க்கிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே அரசு சார்பில் ஏதாவது ஒரு இடத்தில் வழக்கறிஞர்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம்” என்று நினைத்தார்கள்.

ஆனால், கூட்டணியில் இருக்கிறபோது எல்லாக் கூட்டணிக் கட்சியின் தலைவர்களும் அவரவர் பங்கிற்கு அந்தப் பொறுப்புகளைக் கேட்டு வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. அதனால் மாவட்ட அளவில் போட்டாலும், உயர் நீதிமன்றத்திலோ அல்லது பல்வேறு மாநகராட்சிகளிலோ சில பொறுப்புகளைக் கடைசி வரை போட முடியவில்லை. அதுதான் ஒரு பெரிய விஷயம்.

ஏனென்றால், அங்கே இருக்கிறவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான வேலையே நாளும் பொழுதும் நடந்துவிட்டது.

நான் அண்ணன் என்.ஆர். இளங்கோவிடம் சொல்வதை தயவுசெய்து இப்போது எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால், வழக்கறிஞர் அணி என்பது எல்லாக் கட்சியிலும் இருக்கிற வழக்கறிஞர்களை விட உணர்வோடு, துடிப்போடு, எதையும் முன்னின்று செய்யக்கூடியவர்கள். “திமுக வழக்கறிஞர்” என்று சொன்னால் அனைவரும் வந்து நின்ற காலங்கள் உண்டு. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது எந்த நேரமும் நமக்கு வழக்கறிஞர்கள்தான் முன்னால் நின்றீர்கள்; எல்லா வகையிலும் வந்து நின்றீர்கள். அந்த சோர்வு இருந்தது உண்மைதான்; அதில் மாற்றமில்லை.

இந்த இரண்டு மூன்று மாதங்களாக இருந்த சோர்வு என்பதை யாருமே எதிர்பார்க்க முடியவில்லை. இன்றைக்குச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் மீது பொய் வழக்கு போட்டவுடனே என்ன செய்தார்கள்? அரை மணி நேரத்தில், கழகத்தில் இருக்கின்ற தொண்டர்கள் முதற்கொண்டு மூத்த தலைவர்கள் வரை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, உணர்வுபூர்வமாக ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை, போராட்டத்தைச் செய்தது திமுக.. அதை யாரும் மறுக்க முடியாது.

“என்னப்பா, இப்பதான் தேர்தல் நடந்து மூன்று மாதம் ஆச்சு, என்னப்பா செய்வது?” என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், இப்படி ஒரு நிலைமை வரும்போது, உதயநிதி, சென்னையிலிருந்து தஞ்சாவூர் வருகிற வரைக்கும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. எழுச்சி மட்டுமல்ல, தஞ்சாவூரில் எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார்களோ, காவல்துறையினர் அங்கே சென்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், பாதுகாப்புப் பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து செங்கிப்பட்டி ஸ்டேஷனுக்கு மாற்றியதற்குக் காரணமே, திமுகவின் மிகப்பெரிய எழுச்சி உணர்வுதான்!

வலுவுடன் இருக்கும் இயக்கம்

அப்படிப்பட்ட உணர்வு உள்ளவர்கள் மனங்களில் சில சில குறைகள் இருந்தாலும் கூட, எதையும் எதிர்பார்க்காமல் ஒரு துளி கூட சேதாரம் இல்லாமல் வலுவோடு இருக்கிற இயக்கம் நம்முடைய திமுகதான்.

எந்த நிலைமையில் இருக்கிறவர்களும் எதற்காகவும் ஆசைப்படாமல், “இயக்கம் மட்டுமே முக்கியம்” என்பதில் நம்ம கட்சி ரொம்ப வலுவாக இருக்கிறது.

எனவே, கட்சியை ஸ்ட்ராங் பண்ண வேண்டும், திமுகவின் உணர்வை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின், உதயநிதி இவற்றைச் செய்தார்கள்.

தென்மாவட்டத்திலிருந்து வந்திருக்கக்கூடிய வழக்கறிஞர் பெருமக்கள், அந்தந்த மாவட்டங்களில் வழக்கறிஞர்களைத் தயார்படுத்துங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கலாம்; பொறுப்புகள் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் பணியாற்றுங்கள். சட்டரீதியாக இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியை எதிர்கொள்ளக்கூடிய தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களாக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.

நமது ஆட்சியின்போது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அனைவரும் முன்னின்று உழைத்தீர்கள். அதைவிட இன்றைக்குப் பல மடங்கு நீங்கள்தான் இயக்கத்திற்கு முன்னோடியாக இருக்க வேண்டும். வழக்கு என்று வந்துவிட்டால், எந்த வழக்காக இருந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக்கூடிய அருமைச் சகோதரர்கள், வழக்கறிஞர் நண்பர்கள் நீங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு நிறைவு செய்கிறேன். இவ்வாறு மூர்த்தி பேசினார்.

மக்களின் மவுனம் நல்லதுதான்

இந்நிகழ்ச்சியில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி பேசியதாவது: வரக்கூடிய தேர்தல், நமக்கு உள்ளாட்சி மன்றத் தேர்தல், அதற்கடுத்து நாடாளுமன்றத் தேர்தல். இந்த ரெண்டு தேர்தலில் உச்ச கட்டத்தை நாம் பார்க்கணும். ஏதோ ரீல்ஸ் போட்டு சின்ன பிள்ளைககிட்ட சொல்லி ஆட்சிக்கு இன்னைக்கு ஒருத்தர் வந்துட்டாரு; செஞ்சது தவறு என்பதை மக்கள் இன்னைக்கு உணருகின்றனர். இந்தத் தவறை பலகாலம் மூடி மறைக்க முடியாது.

இப்ப நாம் ஒரு ஆட்சிக்கு வந்து அஞ்சு வருஷத்துல முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களைச் செஞ்சாங்க. எல்லா மக்களும் வரவேற்றாங்க; ஆனா, ஒரு திட்டத்தை செய்யாம இருந்தா நம்மைக் குறை சொல்லுவாங்க, “ஏன் நீங்கள் சொன்னீங்க, செய்யல”ன்னு.

ஆனா, விஜய் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை, மக்களும் குறை சொல்லவில்லை, மௌனமா இருக்காங்க.. இந்த மௌனம் தொடர்ந்தால் நமக்குத்தான் சாதகமாக வரும் தேர்தல்.

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு பஸ் இலவசம்னு சொன்னாங்க, மகளிருக்கு ரூ.2,500-ன்னு சொன்னாங்க… இன்னும் வந்து சேரல 6 சிலிண்டர்னு சொன்னாரு, மூன்றுமே சட்டமன்றத்தில நிதி நிலை அறிக்கையில் எந்தத் தெளிவான பதிலும் இல்லை. மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க; நிச்சயமா தளபதி அரசாங்கம் செஞ்ச சாதனைகளை இன்னைக்கு மக்கள் நினைக்கிறாங்க, தொடர்ந்து நினைப்பாங்க. மீண்டும் நம்ம கழகம் வலுப்பெற்று நல்ல ஒரு நிலைமைக்கு வரும். அதற்கு வழக்கறிஞர்களே தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பைத் தர வேண்டும். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share