தமிழ்த் தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும்- சட்டசபையில் முதல்வர் விஜய் தீர்மானம்!

Published On:

| By Mathi

Tamil Thai Vazhthu Must Be Sung First: CM Vijay Moves Resolution in Assembly

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் மாநிலப் பாடலான ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ முதலில் பாடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.

சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி சட்டசபையில் முதல்வர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம்: தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது.

ADVERTISEMENT

மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

2021 டிசம்பர் 12 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் 9-ந் தேதி கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்’ முதலில் பாடப்படுவது மரபுத் தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஆகவே, “தமிழ்த்தாய் வாழ்த்து” தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்த தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share