தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்று முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், பொது நிகழ்வுகள் உள்ளிட்டவைகளில் தமிழ்த் தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும் என்கிற அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 10) தாக்கல் செய்தார்.
இத்தீர்மானத்தை தாக்கல் செய்த போது முதல்வர் விஜய் பேசியதாவது: நம்மைப் பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போதெல்லாம் பாசமும் சொந்தமும் நம்மை அறியாமலே உயிரா, உறவா, உணர்வா தானாக உள்ளுக்குள்ள தோன்றும் அல்லவா? அதே மாதிரி இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லலாம். தமிழ் என்று சொன்னாலே எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று சொல்லவா வேண்டும்?
தாய் எப்படி ஒரு மிகப்பெரிய புனிதமோ, அப்படித்தான் தாய்மொழியும். அதிலும் நம் தாய்மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும். எல்லாருக்கும் நம் தாய்மொழி உணர்வைப் பற்றி புரியும் என்று நினைக்கிறோம்.
தமிழ்நாட்டு மண் தமிழ்த் தாயை விட்டு விடுமா?
நம் தாயே நமக்கு மிகப்பெரிய புனிதமென்றால், நம் எல்லாருடைய தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்? தாயைப் போற்றுகிற, வாழ்த்துகிற தமிழ்நாட்டு மண் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட்டுவிடும்? விடாது, விடவும் மாட்டோம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம் தமிழ்த்தாய் வாழ்த்தை 1891-ல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியையே தமிழ்த்தாய் என்று சொல்லி உயர்வா பாடினார்.
இந்தியத் துணைக் கண்டத்தை, இந்திய ஒன்றியத்தை, அழகிய முகமாகச் சொன்ன மனோன்மணியம் சுந்தரனார், அந்த முகத்தின் நெற்றியில் வைக்கிற பொட்டுதான், திலகம் தான் தமிழ்நாடு என்று சொன்னார். இந்தியாவின் நெற்றியில் இருக்கிற பொட்டு மாதிரி ஒரு வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. அந்த பொட்டின் நறுமணம் உலகம் பூரா பரவுவது மாதிரி, தமிழின் புகழும் உலகம் பூரா பரவ வேண்டும் என்று சொன்னார். உண்மைதானே அது..
தமிழ் பண்பாடு, நாகரிகம்
இன்றைக்குத் தமிழ் பேசுற மக்கள் இல்லாத நாடுகளே ரொம்ப குறைவுதானே. தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது? திரும்பவும் சொல்லலாம், தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு, அது ஒரு நாகரிகம், அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு.
தமிழ் என்றால் கெத்து
தமிழ் என்றால் விருந்தோம்பல், சுருக்கமாக சொன்னால் தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர். அந்தத் தமிழின் புகழைச் சொல்கிற தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்து உலகமும் இன்பமுறு என்று சொல்லி உலகத்தையே நம் தமிழை உயர்த்திப் பிடிக்குதே தவிர, எந்த மொழியையும், எந்த மதத்தையும், எந்த இனத்தையும் ஏன் எந்த ஒரு தனி மனுஷனை கூட தாழ்த்திப் பேசவில்லை, யாரையும் கொஞ்சம் கூட காயப்படுத்தவில்லை.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு பெயர் இருக்கும். ஒரு கூட்டத்தில் நம் பேரை சொல்லி யாரும் கூப்பிட்டால், நாம் ஒருத்தர் மட்டும்தான் திரும்பி பார்ப்போம். ஆனால் தமிழ், தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லாருமே திரும்பி பார்ப்போம் அல்லவா?
தமிழை பின்னுக்கு தள்ளுவதா?
அப்படி நம் எல்லாருக்கும் இருக்கிற பொதுப் பேருதானே அது! நமக்கு தமிழ் என்று அடையாளத்தைக் கொடுத்ததே தமிழ் தானே. ஒரு பேரே, ஒரு சொல்லே ஒரு மிகப் பெரிய வரலாறு என்றால், அது நம் தமிழ்தான். அந்த தமிழை உயர்த்திப் பிடிக்கிற தமிழை பின்னாடி தள்ளினால் தமிழ்நாடு எப்படி பொருந்தியிருக்கும்?
ஒரு கட்சிக்கு பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட அந்த கட்சி மட்டும்தான் போராடும். ஆனால் தமிழ் என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒண்ணா வந்து நிக்கும்.
அதனால்தான் சொல்கிறோம், தமிழ் என்றால் உயிர், தமிழ் என்றால் உணர்வு. உலகத்தில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்து போய் இருக்கு என்று சொல்லுவாங்க. ஆனால் நம் தமிழ் காலகாலமாக நிலைச்சு, நீடிச்சு நிற்கிற ஒன்று.
தமிழில் என்ன இல்லை?
தமிழில் என்ன இல்லைங்க? இலக்கணம், இலக்கியம் என்று பலாயிரம் வருஷமாக இருப்பது நம் தாய்மொழிக்குத்தானே. தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஏன் உலகம் முழுக்க தெரிஞ்ச திருக்குறள் ஒன்று போதாதா தமிழின் பெருமையைச் சொல்வதற்கு?
இவ்வளவு பெருமை கொண்ட தமிழ் மொழியின் ஒரு அடையாளம்தான் நம் தமிழ்த்தாய் வாழ்த்து. ஒட்டு மொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பேசுற தமிழ்த்தாய் வாழ்த்து நம் ஊரில், நம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்கணும்.
தமிழ்த் தாய் வாழ்த்துக்குதான் முதலிடம்
நம் இந்திய அரசியல் சாசனமே ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும், பண்பாட்டுக்கும், பாரம்பரியத்துக்கும் பாதுகாப்பு உரிமையை கொடுத்திருக்குதானே. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுத்துத்தானே ஆகணும்.
அதானே மாநில உரிமை. அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தைத்தான் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதல்ல பாடணும் என்று சொல்லி ஒரு அரசாணையை போட்டு அந்த செயல்பாட்டுக்கு வந்துருச்சு.
அதுக்கப்புறம் 2021 டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டுச்சு. அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படணும்னு அரசாணையும் இருக்கு.
கடிதங்கள் மூலம் கோரிக்கை
2026 ஜனவரி மாசம் 28-ஆம் தேதி ஒன்றிய அரசின் கடிதத்தில் அரசு விழாக்களில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் மாநில பாடல் பற்றி எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்துச்சு. நம் அரசு பொறுப்பேற்றதும் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மாநில பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்ன்னும், ஒன்றிய அரசு வெளியிட்ட ஆணைக்கு திருத்தம் வெளியிடணும்னும், மாநில விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாடறதுக்கான உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும்னு சொல்லி கடிதம் எழுதியிருந்தோம்.
அதைத் தொடர்ந்து போன ஜூலை மாசம் 9-ம் தேதி கடிதத்தில் மாநில பாடல் பாடப்படுவது பற்றி இருந்துச்சு. ஆனால் நம் தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்து எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதல்ல பாடறது ஒரு மரபாவே இருக்கு. அதுக்கான அரசாணையும் இருக்கு.
சமரசமே இல்லை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் நமது உயிர் மூச்சு, தமிழ் மொழி நமது அடையாளம், தமிழ் பண்பாடு நமது பெருமை. அதனால தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்யவே செய்யாது.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசியல் அமைப்பிற்கும், இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது இல்ல. மாறாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துறது.
அரசியல் விவாதமே இல்லை
மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாடணும்னு சொல்றது அரசியல் சம்பந்தமான விவாதமா மாறணும்ங்கிற அவசியமே இல்லை. இது தமிழர்களின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவதல்ல ஒன்றிணைப்பது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும், தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் இந்த சட்டமன்றப் பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
