விவசாயிகளுக்கான நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் முதல்வர் விஜய்.
தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு:
விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர்.
தற்சமயம் தமிழ்நாட்டின் நிதிநிலைமை சரியில்லாமல் இருந்தாலும் நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என கருதி தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல்லுக்கான ஊக்கத் தொகை
நெல் கொள்முதல் பருவம், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையாக
- சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 289
- பொதுரக நெல் ஒன்றுக்கு ரூ. 159
என உயர்த்தி - சன்னரக நெல் ரூ. 2,750
- பொதுரக நெல் ரூ. 2,600 என வழங்கப்படும்.
வரலாற்றில் முதல் முறை
மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையினை ஓராண்டில் ரூ. 156-க்கு மேல் உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
கரும்பு
அதேபோல 2025-26 கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50 நிர்ணயம் செய்துள்ளது.
அதற்கும் மேல் தமிழ்நாடு அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வழங்கப்படும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு
- டன் ஒன்றுக்கு ரூ. 4,000 கரும்பு விலையாகக் கிடைக்கப்பெறும்.
கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத் தொகை ரூ. 156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில்
தற்போது முதல் ஆண்டிலேயே ரூ. 360.50 உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் இம்மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் ரூ. 134-க்கு மேல் வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
நமது அரசு எப்போதும் விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல் அவர்களோடு தோளோடு தோள்கொடுத்து விவசாயம் சிறக்கவும், ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.
