மத்திய அரசின் FCRA மசோதாவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் முன்மொழிவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மற்றும்வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்

அதில் “வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, தற்போதைய வடிவில், FCRA பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல், பதிவு இரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநிலஅரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு ஒன்றிய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.

ADVERTISEMENT

எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கைநீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாச்சார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.

எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share