“முதலில் இடத்தை மாற்றியது யார்?” பேரவையில் ஓபிஎஸ்- செங்கோட்டையன் காரசார வாதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

திரும்புகின்ற பக்கமெல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்கள்தான் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன என திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று திமுக எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் பேசுகையில், “சட்டமன்றம் எத்தனையோ வித்தியாசமான சூழல்களைக் கண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசு ஏற்படுத்தியிருக்கும் சூழல் என்பது வித்தியாசத்திலும் வித்தியாசமானது. “செய்வதை மட்டும்தான் சொல்வோம்” என்று ஆணைத்தனமாக அள்ளித்தெளித்த, வாக்குறுதிகளைத் தாங்களும் மறந்து, மக்களும் மறந்திருப்பார்கள் என்று எண்ணித் தனது முதல் நிதிநிலை அறிக்கையையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது இந்த அரசு. அதிலும் பெயர் மாற்றங்களுடன் வெளியான இந்த நிதிநிலை அறிக்கை, தேர்தலின் போது சொன்ன “கஜானா காலி” என்ற பிரச்சாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இதைப் பார்த்து ஆச்சரியக்குறிகள் கூட விக்கித்து நிற்கும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அரங்கேறிய காட்சிகளை நான் திரும்பிப் பார்க்கிறேன். முதல்வர் துறை ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டார். பட்ஜெட்டுக்கு முன்னதாக மீண்டும் ஆய்வு செய்தார்கள். அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளுக்கான செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு “வெற்றித் தமிழக திட்டங்கள்” என்றெல்லாம் அலங்காரமாகப் பெயர் சூட்டப்பட்டு அறிக்கைகளாகவும் வெளியானது. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையோ ஏமாற்றத்தின் வடிவமாக உள்ளது.

திரும்புகின்ற பக்கமெல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்கள்தான் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் நிலை கொண்டுள்ள எங்கள் தலைவர் ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்கள் புது உருவம் கொண்டு நிற்கின்றன. இதில் புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். தேடுவது எனக்காக அல்ல, மக்களுக்காக! புதிய அரசு அமைந்திருக்கிறது, புதிய திட்டங்கள் வரும் என்று நம்பிய மக்களுக்காக!

ADVERTISEMENT

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் சுயமரியாதைக்கும் துணை நின்ற திட்டம். ‘ஆயிரம் கைகள் நீட்டி ஆதவனை மறைக்கலாம்’ என்று கனவு காண்பது போல அத்திட்டத்திற்குப் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால், ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல உரிமைத் தொகை உயரவில்லை. இனிப்பூட்டும் இன்பச் செய்திகள் வரும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வரும் என்று நம்பிய மகளிர், அது குறித்த அறிவிப்புகள் கூட வரவில்லை என்று ஏமாந்து நிற்கிறார்கள் பாவம்!

“கல்வி ஒன்றே யாராலும் திருட முடியாத சொத்து” என்பதை எல்லாத் தருணங்களிலும் எடுத்துச் சொல்லி, கல்விக்கும் மாணவர்களுக்கும் பொற்காலமாக விளங்கிய திராவிட மாடல் ஒளியில் இந்த அரசு நடைபோடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் திட்டம், ரூ. 15,000 ரூபாய் நிதி உதவி என்ற அறிவிப்புகளோ, அதற்கு உண்டான திட்டங்களோ இந்த அறிக்கையில் காணவில்லை.

ADVERTISEMENT

நாடே திரும்பிப் பார்த்து பல்வேறு மாநிலங்களும் கைக்கொண்ட திட்டம் விடியல் பயணம். இதனை விரிவுபடுத்தி அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என்று மகளிர் நம்பினர். ஆனால், அதிலும் ஏமாற்றம்.

“இந்தப் பேரவையில் நான் செய்யாமல் விட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளேன். நல்லதும் மாற்றம்தான், கேட்டதும் மாற்றம்தான். எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான்” என்றார்.

அப்போது குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஓ. பன்னீர்செல்வம் ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்து பணியாற்றியவர். ஒரு அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கின்ற திட்டங்களை ஐந்து ஆண்டு இறுதி வரையிலும் நிறைவேற்றும். நீங்கள் சொல்வதைப் போல மூன்றே மாதக் காலத்தில் ஒரு சரித்திரம் படைக்க இயலாது. நீங்கள் அப்படி சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள்” என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை, இந்த புதிய அரசு தேர்தல் வாக்குறுதிகளின் முன்னோட்டங்களாக இந்த சட்டமன்றத்தில் கூட அறிவித்திருக்கலாம். அதைக்கூட அறிவிக்கவில்லை என்பதுதான் எங்களின் வாதம். தமிழக மக்கள் இன்று ஏமாந்து நிற்கிறார்களே, இது அவர்களின் எண்ணமாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தமிழகமே பாராட்டிக் கொண்டிருக்கிற ஒரு தூய ஆட்சியைப் பற்றி ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று நீங்கள் சொல்லும்போது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறியிருக்கிறீர்கள், பரவாயில்லை. அதற்காக இப்படி துதிபாட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

அப்போது பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், “அந்த இடத்தை அவர்தான் முதலில் மாறியவர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார்” என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன்.

திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200 சதவிகிதம் தெரியும். பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.

கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர். தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதல்-அமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share