கருக்கலைப்பு குறித்த சபாநாயகர் கருத்துக்கு பாஜக கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கிறிஸ்தவ சமூகத்திற்கு எந்தக் காலத்திலும் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்பதில் மிக உறுதியான நம்பிக்கை உள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ்-மயிலாப்பூர் கத்தோலிக்க பேராயமும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) கீழ் இயங்கும் ‘சாரிஸ் இந்தியா’ (CHARIS India) அமைப்பும் இணைந்து கடந்த ஞாயிறன்று பேரணி ஒன்றை நடத்தின. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘வாழ்க்கையை ஆதரிப்போம்’ (Pro-life) பேரணியில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இந்த பேரணியில் ‘கருக்கலைப்பு ஒரு கொலை’ மற்றும் ‘வாழ்க்கையை மதிப்போம்’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியலமைப்பு சட்ட விதிகளின் கீழ் வகிக்கும் சபாநாயகர், பெண்களின் உடல் மீதான அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான இதுபோன்ற நிலைப்பாடுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியின் இடையே செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபாகர், “கிறிஸ்தவ சமூகத்திற்கு எந்தக் காலத்திலும் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்பதில் மிக உறுதியான நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கடவுள் கொடுத்த வரம்; அதை ஒவ்வொரு பெண்ணும் குடும்பமும் போற்ற வேண்டும்” என்று கூறினார். மேலும், இந்த விவகாரத்தை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

சபாநாயகர் சட்டத்தின் காவலராகச் செயல்படுகிறாரா அல்லது ஒரு மதத்தின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உச்ச நீதிமன்றமே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும், தனது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியமானது என்பதையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், ‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பங்கேற்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுவதற்குச் சமமாகும்.

சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராகவும், சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைப் போதித்து, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கடும் விமர்சனத்திற்குள்ளான ஜே.சி.டி பிரபாகர் அவர்கள், தற்போது மீண்டும் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பைக் குலைப்பதாக உள்ளது.

ADVERTISEMENT

மத அடையாளத்திற்காகப் பெண்களின் உரிமைகளுடன் விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நவீன சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். நாட்டின் சட்டத்தை விடத் தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சபாநாயகரின் செயல், தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனை மற்றும் சமூக நீதிப் பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவாலாகும். சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share