நீட் தேர்வு முறையை அகற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்று வருகிறது.
அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ், நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என அரசினர் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
“தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் கிராமப்புற மற்றும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவ கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது.
நீட் தேர்வானது வரம்பின்றி அதிகளவு கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுக்கிறது.
மாணவர்களின் கவனத்தை பள்ளி பாடத்திட்டத்தை பயில்வதில் இருந்து திசை திருப்பி நீட் பயிற்சியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது.
12 ஆண்டுகால பள்ளிக்கல்வியை புறந்தள்ளி ஒரு நாள் நுழைவு தேர்வே மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் முன்பதிவு (எண்: 43/2021) தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி இருந்தும், குடியரசு தலைவரால் அச்சட்ட முன் வடிவுக்கு ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் துயரம் அடைந்தனர். உயிரிழப்பும் ஏற்பட்டது.
இத்தேர்வு முறை நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே இத்தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
நீட் தேர்வுகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில் 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (மைய சட்டம் 30/2019), 2020 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம் ( மைய சட்டம் 14/2020) , 2020 ஆம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம் (மைய சட்டம் 15/2020) மற்றும் தொடர்புடைய பிற மைய சட்டங்களின் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும்” என்று முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து இந்த தீர்மானத்திற்கு தவெக, திமுக, அதிமுக, பாமக, மஜக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தனி தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்
