தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் கவனத்தை பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.
நேற்று திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில், ”நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். நாங்கள் எப்போதும் டென்ஷன் ஆகவே இருப்போம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு அமைச்சர் ஆனந்த், ”நாங்களும் தினம்தோறும் டென்ஷனாகவே இருக்கிறோம். ஒரு சின்ன வாய்க்கால் பிரச்சினை என்றால் கூட முதல்வர் எங்களுக்கு போன் செய்து விடுவார்” என்று பதிலளித்திருந்தார்.
நேற்று நடந்த இந்த விவாதம் தொடர்பாக இன்றைய தினமும் விவாதங்கள் நடந்தன.
தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சுகுமார் பேசுகையில், ”திமுகவுக்கு டென்ஷன் இருக்கிறது என்றால் ஈடி வழக்குகள் உள்ளன” என்று கூறினார்.
இவரது பேச்சுக்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் பேசும்போது 5 வருடங்களாக தினமும் எங்களுக்கு டென்ஷன் என்றார். அதற்கு அமைச்சர் ஆனந்த், எங்களாலும் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் டென்ஷன் தான் என்று கூறினார். எனவே மீண்டும் மீண்டும் அதனை பற்றி பேச வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது. ஐடி வழக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், ”சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதெல்லாம் கரெக்ட் தான். எங்கள் முதல்வர், தொகுதியில் என்ன பிரச்சனை, உடனுக்குடன் சரி செய்யப்படுகிறதா என்று கேட்பார். அதற்காகத்தான் நான் அப்படி பதில் சொன்னேன். வேறு எந்த விதத்திலும் எங்களுக்கு டென்ஷன் இல்லை” என கூறினார்.
”முதலில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எப்போது தலைவர் பேசுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவருடைய போன் வந்தாலே பயம் வருகிறது. தொகுதியில் சின்ன பிரச்சினையாக இருந்தாலும் கூட அதைக் கேட்கக் கூடியவர் எங்கள் முதல்வர்” என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”எங்கள் ஆட்சியில் முதலமைச்சர் தினசரி பேப்பர்கள் பார்த்து துறை சம்பந்தமான செய்திகள் வந்துள்ளதா என்பதை கவனித்து உடனடியாக நிவர்த்தி செய்ய சொல்வார். அந்த எண்ணத்தில் தான் முன்னாள் அமைச்சரும் பேசினார்” என்று கூறினார்.
இந்த உரையாடல்கள் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
