கோவை மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சமையல்காரரை அடித்தற்காக அமுதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பெற்றோர் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர் என நினைத்திருந்தோம். ஆனால் மாணவன் அமுதன் வெளியில் தங்கி இருந்தது எங்களுக்கு தெரியாது. எங்கள் கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் , கல்லூரிக்கு வெளியில் சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் அமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 5 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மாணவர்களிடையே ஏற்கனவே இருந்த கோஷ்டி மோதல்தான் சம்பவத்திற்கு காரணம் என தெரிவித்தார். இதற்கு திமுக ஐடி விங் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், இன்று (ஆகஸ்ட் 12) இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயா மற்றும் டீன் மகுடிஸ்வரன் , ஆனந்தமூர்த்தி, பி.ஆர்.ஓ ரவிக்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கல்லூரி முதல்வர் ஜெயா கூறுகையில், ” எங்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மெக்காட்ரானிஸ் மாணவர் அமுதன் உயிரிழந்திருக்கிறார்.அவரது இறப்பு வேதனை அளிக்கின்றது. மாணவர் அமுதன் கல்லூரி விடுதிதியில் தங்கி படித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 21 ம் தேதி அவரும் அஜீஸ் என்ற மாணவரும் விடுதியை விட்டு வெளியில் வந்த போது சமையல்காரர் மனோஜ் என்பவர் அவர்களை எங்கு செல்கின்றீர்கள் என கேட்ட போது இருவரும் சமையலர் மனோஜை தாக்கினர். மனோஜ் காயம் அடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சமையலர் மனோஜ் தாக்கப்பட்டதால் அங்கு இருந்த மற்ற சமையல் கலைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது விடுதியில் இருக்க முடியாது, விடுதியில் சமையல் வேலை பார்க்க முடியாது என சொல்லி விட்டதால் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு அமுதன், அஜீஸ் ஆகிய இருவரும் ஜூலை 22 ம் தேதி ஆஜராகினர். அப்போது தாக்குதல் சம்பவத்தை மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
23 ம் தேதி அஜீஸ் பெற்றோரும், 24 ம் தேதி அமுதன் பெற்றோரும் வந்த நிலையில் அவர்களிடம் நடத்த சம்பவம் குறித்து தெரிவித்தோம். பின்பு, மாணவர்கள் இருவரும் விசாரணைக்கு பின்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்ய மாணவர்கள் பெற்றோர் தரப்பில் கேட்கப்பட்ட நிலையில் 11 ம் தேதி வர சொல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே 10 ம் தேதி அமுதன் மருத்துவமனையில் இருந்ததாக தகவல் வந்தது. அங்கு கல்லூரி சார்பில் பி.ஆர்.ஒ சென்ற போதுதான் மாணவர் இறந்தது தெரிய வந்தது” என்றார்.
மேலும் “சமையல்காரரை அடித்ததற்காக அமுதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பெற்றோர் தங்களுடன் அவர்களை அழைத்து சென்றுவிட்டனர் என நினைத்திருந்தோம். ஆனால் மாணவர் அமுதன் வெளியில் தங்கி இருந்தது எங்களுக்கு தெரியாது” என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மாணவர்கள் மீது போதை பொருள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்க வில்லை. அதே சமயம் எங்கள் கல்லூரியில் போதை பொருள் தொடர்பான புழக்கம் இல்லை. கைதான 5 மாணவர்களில் எங்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மட்டும் இல்லை, வேறு சிலரும் உள்ளனர். மாணவர் அமுதன் இறந்த பின்பே தங்களுக்கு தகவல் தெரியும்.
காவல் துறை 15 மாணவர்களின் பட்டியலை கொடுத்து அவர்கள் குறித்த தகவலை கேட்ட நிலையில் அது குறித்த தகவல் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதே சமயம், “கல்லூரி தரப்பில் போதை பொருள் தொடர்பாக மாணவர்களிடம் எந்த விசாரணையும் நடத்த வில்லை.சமையலர் தாக்கப்பட்டது தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தினோம்.
அமுதனை பெற்றோர் அழைத்து சென்று இருக்கின்றனர் என நினைத்த நிலையில் மாணவர் இங்கேயே தங்கி இருந்திருக்கின்றார் என்ற தகவல் தாக்குதலுக்கு பின்பே எங்களுக்கு தெரியும். ஆனால் அமுதனுக்கு போதை பொருள் பழக்கம் இருந்ததாக எந்த தகவலும் இல்லை” என தெரிவித்தனர்.
