“97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையா?” – தவெக அரசை சாடிய டி.ஆர்.பி. ராஜா

Published On:

| By Kavi

இன்று தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இதில் ஒரு லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

ADVERTISEMENT

கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் இன்றைய மாநாடு தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், 

ADVERTISEMENT

“எந்த ஆட்சி நடந்தாலும், நமது மாநிலத்தில் உருவாக்கப்படும் ஒவ்வொரு முதலீடும், தொழிற்சாலையும் வேலைவாய்ப்பும் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. 

அதனால்தான் இன்று 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படும் உரிமைகோரலில் கூடுதல் வெளிப்படை தன்மை தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ADVERTISEMENT

இன்றைய மாநாட்டில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. 

கடந்த பல பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைப்பதில் சென்னையில் உள்ள தொழில்துறை பத்திரிக்கையாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களை இந்த நிகழ்வில் இருந்து ஒதுக்கி வைத்தது ஏன். இன்றைய 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை ஏன் இதுவரை வெளியிடவில்லை? 

கிடைக்கப்பெற்ற தகவல்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது பின்வரும் உண்மைகள் வெளிப்படுகின்றன. 

அதாவது கிட்டத்தட்ட 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மொத்த முதலீட்டில் சுமார் 75 சதவிகிதம் மற்றும் வேலை வாய்ப்புகளில் 83 சதவீதம்- ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கங்கள் ஆகவோ அல்லது முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசால் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட முதலீட்டு முன்னெடுப்புகளாகவோதான் தோன்றுகின்றன. 

டைட்டன் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு என்பது டிட்கோ அமைப்பு மூலம் மாநில அரசுடன் அந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே இருக்கும் உறவின் அடிப்படையில் வந்ததாகும். 

புதிதாக வர வாய்ப்புள்ள அனைத்து முதலீடுகளையும் நாம் தாராள மனப்பான்மையுடன் சேர்த்துக் கொண்டால் கூட அது வெறும் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே ஆகும். இது மொத்த மதிப்பில் சுமார் 23 சதவிகிதம் மற்றும் வேலைவாய்ப்பில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே. 

முந்தைய ஆட்சி காலத்தில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீடு, புதிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்படுகிறது என்பதற்காகவே திடீரென்று புதிய சாதனையாக மாறிவிடாது. 

திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எப்போதும் இல்லாத புதிய உச்சங்களை தொடும். இருந்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வெற்றி என்பது எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. இதை எப்போதும் திமுக மதித்தே செயல்பட்டது. 

முந்தைய அரசு சிறந்த தொழில் சூழலை உருவாக்கி முதலீட்டாளர்களை ஈர்த்தது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 

தற்போதைய அரசு புதிதாக என்ன கொண்டு வருகிறது என்பதை பொறுத்தும் உண்மையில் எதை செய்து முடிகிறது என்பதை பொறுத்தும் மட்டுமே நியாயமாக மதிப்பிட வேண்டும். 

அதனால்தான் இந்திய தொழில் முனைவோர் சங்கம் இன்று எழுப்பியுள்ள கேள்விகள் கூடுதல் கவனத்திற்கு உரியதாகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்-முதலீடு-உற்பத்தி-வேலைவாய்ப்புகள்-குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வாய்ப்புகள்….

அதுவும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் அளவில் உருவாகும் வேலைவாய்ப்புகள்….

அதுவே உண்மையான அளவுகோல். 

இன்று கையெழுத்தான நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிடுங்கள். அவர்கள் அதை ஆராய வேண்டும். உண்மையில் புதியது எது, விரிவாக்கம் செய்யப்பட்டது எது, ஏற்கனவே இருந்தது எது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

விளம்பரங்களில் கூறப்படுவது போல இந்த எண்கள் உண்மையிலேயே பிரம்மாண்டமானவை என்றால் இந்த வெளிப்படை தன்மை அந்த சாதனையை இன்னும் வலுப்படுத்தவே செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share