சபாநாயர் ஓம் பிர்லாவின் ‘டீ பார்ட்டி’.. மோடி, அமித்ஷாவுடன் கனிமொழி பங்கேற்பு!

Published On:

| By Mathi

Kanimozhi MP DMK

டெல்லியில் சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்திருந்த ‘டீ பார்ட்டியில்’ திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. (DMK Kanimozhi) பங்கேற்றார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் நீட் முறைகேடு, டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை, ராமர் கோவில் உண்டியல் திருட்டு, காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்டவைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தன.

ADVERTISEMENT

இதனால் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளும் தொடர்ந்து நடத்தப்பட முடியாமல் முடங்கின. இன்று மக்களவை இறுதி நாளிலும் அமளி நீடித்தது. இதனால் மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா மறுதேதி குறிப்பிடாமல் சபையை ஒத்திவைத்தார்.

இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி தமது அலுவலகத்தில் ‘டீ பார்ட்டி’க்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த ‘டீ பார்ட்டி’யில் காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றார்.

இது தொடர்பாக சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “கடந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட 131-வது அரசியல் சட்டத் திருத்தத்தைத் தோல்வியடையச் செய்ததால், நிறைவு நாளில் சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் பங்கேற்கவில்லை; ‘INDIA’ கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் பங்கேற்றோம்.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தொடரில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவைக்கே வராமல் இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பதைக் கண்டித்து, சபாநாயகரின் தேநீர் விருந்தை ‘INDIA’ கூட்டணி கட்சிகள் புறக்கணித்தோம்” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share