நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை ஆகஸ்ட் 15-ந் தேதி தேசியக் கொடியேற்றுகிறார். இந்த நிகழ்வில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையிலிருந்து நாளை நடைபெறும் 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகிக்கிறார். ‘வந்தே மாதரம்’ என்ற தேசியப் பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையிலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இளைஞர் சக்தியின் ஆற்றலைக் கொண்டாடும் வகையிலும் இந்நிகழ்வு அமைகிறது.
முதல் முறையாக வந்தே மாதரம்
செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களின் போது, ‘வந்தே மாதரம்’ பாடல் முதல் முறையாக இசைக்கப்படும்.
அணிவகுப்பு மரியாதை
செங்கோட்டைக்கு பிரதமர் வந்தடைந்ததும், அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். அதன்பிறகு, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடுவார்.
பின்னர் பிரதமர் மோடி, செங்கோட்டையின் கொத்தளத்துக்குச் செல்வார். முப்படைகளின் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகியோர் வரவேற்பர்.
தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, டெல்லி பகுதி தளபதி பிரதமரை கொத்தளத்தில் உள்ள மேடைக்கு அழைத்துச் சென்ற பின் பிரதமர் மோடி கொடியேற்றுவார்.
பொது வசதி
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக 6 இடங்களில் 25 உடைமைகள் வைக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
என்.சி.சி-யைச் சேர்ந்த 100 பேர் மற்றும் ‘மை பாரத்’ அமைப்பைச் சேர்ந்த 100 பேர் என மொத்தம் 200 தன்னார்வலர்கள், காவல்துறையினருடன் இணைந்து பார்வையாளர்களுக்கு உதவுவர்.
சக்கர நாற்காலிகளின் உதவி தேவைப்படும் அனைத்துப் பார்வையாளர்களுக்காகவும், மெட்ரோ நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடங்களிலும் என்.சி.சி. மாணவர்கள் இருப்பார்கள்.
மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றடைவதற்காக, ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 4 மணி முதல் மெட்ரோ சேவை இயக்கப்படும்.
