ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் இருவர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 6 ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேரை தாலிபான் அமைப்பினர் கைது செய்து சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார்.
அலுவலகத்திற்குச் சீல்
காபூலில் இயங்கி வரும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்ட ஆராய்ச்சி அறக்கட்டளை’ (WCLRF) எனும் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி தாலிபான் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி, ஜூலை 18 அன்று அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த 6 ஆண் ஊழியர்களைத் தாலிபான்கள் நேரில் வரவழைத்து, கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். கைதான ஊழியர்கள் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் குடும்பத்தினருக்கு இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஐ.நா. ஊழியர்கள் கைது
மற்றொரு சம்பவமாக, ஹெராட் நகரில் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. உதவி மையத்தின் (UNAMA) இரண்டு உள்ளூர் ஊழியர்களைத் தாலிபான் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. மேலும் தங்கள் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்பதையும் தாலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது.
உயிர் காக்கும் உதவிகள் முடங்கும் அபாயம்:
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆப்கானிஸ்தான் ஆராய்ச்சியாளர் ஃபெரெஷ்டா அப்ஸாசி கூறுகையில், “ஐ.நா. ஊழியர்களின் இந்த கைது நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உயிர் காக்கும் மனிதநேய உதவிகளைப் பெரிதும் பாதிக்கும்” எனக் குறிப்பிட்டார்.
மலாலா கண்டனம்:
கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாலிபான்களால் சுடப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்த மலாலா, தற்போது பெண் கல்விக்காகவும் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்ட ஆராய்ச்சி அறக்கட்டளை’ ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு மலாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “சில வாரங்களுக்கு முன்பு, காபூலில் உள்ள ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்ட ஆராய்ச்சி அறக்கட்டளை’ (WCLRF) அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய தாலிபான் முகவர்கள், அங்கிருந்த 6 ஊழியர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் அல்லது பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை.
அவர்களின் பணி எந்தவொரு அச்சுறுத்தலையும் உருவாக்குவது அல்ல. அது ஆப்கானிய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான ஒரு வாழ்வாதார நம்பிக்கை.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும், எந்தவித நிபந்தனையுமின்றியும் விடுவிக்க வேண்டும் என்ற ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ (Amnesty International), ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்பு அதிகாரி மற்றும் பிற அமைப்புகளின் கோரிக்கையில் நானும் கரங்கோர்க்கிறேன். அவர்கள் உடனடியாகத் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
