“2001 அரசியல் சூழலுக்கு திரும்பும் திமுக”: பாஜக கூட்டணி குறித்து சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Nirmal kumar

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. இதன் மூலம் பாஜகவுடன் திமுக தற்போது நேரடியாகவே கூட்டணியில் உள்ளது தெரியவருகிறது என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “கனிமொழி எம்பி ‘இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திமுக ஏற்கனவே பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் இருந்தது; இப்போது நேரடியாகவே கூட்டணியில் இருக்கிறார்கள். திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ‘திருச்சி சிவா விரைவில் அமைச்சராக மாறுவார்’ என்கிறார். இதிலிருந்தே இவர்களது பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

ADVERTISEMENT

அதேபோல, திமுக முன்னாள் எம்பி கனிமொழி என்.வி.என். சோமு ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை’ என்கிறார். அதையேதான் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் தெரிவிக்கிறார். இதன்மூலம் அவர்கள் மீண்டும் 2001-ஆம் ஆண்டு சூழலுக்கே சென்றுவிட்டார்கள் என்பது தெரிகிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு முதன்முதலில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்ததே திமுகதான். மீண்டும் தங்களது குடும்பங்களையும் சொத்துக்களையும் காப்பாற்றிக்கொள்ளவும், வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் பாஜகவுடன் நேரடியாகக் கூட்டணி வைக்க திமுக தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

தொகுதி மறுவரையறை விஷயத்தில் ஏப்ரல் மாதத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் ‘நாங்கள் எதிர்த்து வாக்களிப்போம்’ என்று திமுக தரப்பில் இருந்து இதுவரை ஒரு வார்த்தைகூட வரவில்லை. தவெக கொண்டுவந்த தீர்மானத்தை திமுக ஆதரித்துள்ளது; ஆனால் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சம்பந்தமான மசோதா வந்தால் ‘நாங்கள் எதிர்த்து வாக்களிப்போம்’ என்று இதுவரை ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை.

ஏப்ரல் மாதத்திற்கும் இப்போதைய சூழலுக்கும் என்ன மாறியுள்ளது? மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்ற ஒன்றிய அரசின் உதவி தேவைப்படுகிறது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தமிழகத்தின் அனைத்து நலன்களையும் அடமானம் வைத்து, டெல்லியிடம் திமுக கொத்தடிமையாகச் சரணடைந்துவிட்டது.” என்றார்.

ADVERTISEMENT

மேலும், டாஸ்மாக் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.” என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share