கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநீயமனம் வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) இடைக்கால தடை விதித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்யை காண பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு பணிக்கான பணியானைகளை வழங்கியது.
இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது..
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதுபோன்று கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆனந்த ஜோதி மற்றும் பிரபாகரன் செல்வகுமார் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (ஆகஸ்ட் 14) நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகில் ரோத்தகி உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினார்கள்.
அபிஷேக் மனு சிங்வி, “அரசியலமைப்புச் சட்டத்தின் 162 வது பிரிவின்கீழ், இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கருணை அடிப்படையில் நியமனம் வழங்க விரும்பினால் அதில் உயர் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்?. மனுவில் அரசாணைக்கு எதிராகவோ, எந்த ஒரு ரத்து கோரிக்கையோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கப்படவில்லை. அரசு பணி நியமனம் தொடர்பாக ஒரு வழக்கறிஞரால் பொதுநல மனு தாக்கல் செய்ய முடியுமா என்று தெரியவில்லை” என வாதங்களை முன் வைத்தார்.
அப்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் வேலன் ஆஜரானார்.
அவர் குறுக்கிட்டு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது என்பது மாநில அரசின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. கரூர் சம்பவத்துக்கு காரணமான அதே கட்சிதான் தற்போது ஆட்சியில் இருக்கிறது என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள், ”வழக்கறிஞர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ”நான் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்” என்று கூறிய போது உடனடியாக குறுக்கிட்ட நீதிபதிகள், ”அரசியலை இங்கு கொண்டு வராதீர்கள்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ”துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்து, ஒருவேளை பணமாக நிவாரணம் வழங்கத் தீர்மானித்திருந்தால், நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பீர்களா?
பணி நியமனம் வழங்கக் கூடாது என்று அரசின் கொள்கை முடிவைக் கேள்வி கேட்க நீங்கள் யார்?
அந்த நெரிசல் விபத்தில் குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த நபர் உயிரிழந்து, அக்குடும்பத்தில் வருமானத்திற்கு வேறு யாரும் இல்லாதபட்சத்தில், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மகன், மகள் அல்லது மனைவிக்கு அரசு ஏதேனும் பணி நியமனம் வழங்கக் கூடாதா?” என்று கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து அரசு பணி நியமன அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலளிக்குமாறு இருதரப்பிற்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
