தேர்தல் தோல்வி, கட்சி சீரமைப்பு.. திமுகவினரின் கருத்துகளை கேட்க உருவானது வெப்சைட்!

Published On:

| By Mathi

DMK Stakub Cadres Voice

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல, சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக திமுகவினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்க இணையதளம் (வெப்சைட் Website) உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மே 14-ந் தேதி நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் , “ரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும்.

ADVERTISEMENT

அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும்.

அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன்.

ADVERTISEMENT

அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க. கழக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன். உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ’வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும்.

கழகம், இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க? நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம். இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்.

ADVERTISEMENT

தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்.

அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது.

கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல” என பேசியிருந்தார்.

இதனையடுத்து தற்போது https://udanpirapinkural.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. “உடன்பிறப்பின் குரல்” என்ற இந்த இணையதளத்தில், “கட்சியின் மேம்பாட்டுக்கான உங்கள் குரல்.. தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களைப் புரிந்து, கட்சியை மேம்படுத்த உங்கள் உண்மையான பின்னூட்டத்தைப் பகிருங்கள்” என்ற முகப்புடன் இந்த வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வெப்சைட்டின் நோக்கமாக

கழகத்தை மேம்படுத்தவும், தேர்தல் செயல்பாட்டிற்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவும் — இரண்டிற்கும் உறவுகளின் குரல் இன்றியமையாதது. அமைப்பு, பிரசாரம், தலைமை, தொடர்பு — எவையெல்லாம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை உறவுகளிடமிருந்து நேரடியாக கேட்கிறோம்; வாக்காளர்கள் ஏன் இப்படி வாக்களித்தார்கள், எந்த தொகுதிகளில் என்ன நடந்தது — அடிமட்ட நிலையிலிருந்து வரும் உண்மையான காரணங்களைக் கேட்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தயக்கமின்றி பேசுங்கள் — உங்கள் கோபமும், ஏமாற்றமும், மாற்றத்திற்கான யோசனைகளும் கழகத்தின் அடுத்த பயணத்திற்கு வழிகாட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதில் உள்நுழைந்த பின், ஆடியோ பதிவுக்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திமுகவினர் தங்களது குரலை பதிவு செய்ய முடியும். அதே போல எழுத்து வடிவிலும் பதிவு செய்யலாம்; ஆதாரங்களை இணைக்கலாம்.

அத்துடன் உங்களை தொடர்பு கொள்ள வேண்டுமா? உங்களது கருத்து எதன் அடிப்படையிலானது? என்கிற அம்சங்களும் இந்த வெப்சைட்டில் உள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share