தமிழகத்தை உலுக்கியுள்ள ரூ.258 கோடி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ (John Britto) யார் என்பது குறித்து அதிர்ச்சி தகவல்கள் மின்னம்பலத்துக்குக் கிடைத்துள்ளன.
ஜான் பிரிட்டோ..
தமிழக அரசியலையே உலுக்கி வருகிறது இந்த பெயர்..
அமலாக்கத்துறை மே 27-ந் தேதி வெளியிட்ட செய்தி அறிக்கையில் இருந்து இந்த பிரளயம் தொடங்குகிறது.
அமலாக்கத்துறையின் அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?
அமலாக்கத்துறையின் அறிக்கையில்,
- ”2024-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி, மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு நாட்டுப் படகை இடைமறித்து, இலங்கைக்கு கடத்தவிருந்த 99 கிலோ ஹாஷிஷ் (Hashish) போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.
108 கோடி. - இதேபோல மதுரை ரயில் நிலையத்தில் பிலோமென் பிரகாஷ் என்பவரிடமிருந்து 37.645 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ150 கோடி.
- இந்த 2 வழக்குகளின் தொடர்ச்சியாக, மே 26-ந் தேதி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் 5 இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- இந்த 2 கடத்தல் சம்பவங்களுக்கும் பின்னணியில் ஜான் பிரிட்டோ (John Britto) என்பவரே முதன்மை குற்றவாளியாக (Mastermind) செயல்பட்டது தெரியவந்துள்ளது.
- மேலும், ரெமிஸ்டன், ரமேஷ், ஜான்சன் மற்றும் பிரதாப் ஆகிய சில மீனவர்கள், படகு உரிமையாளர்கள் இந்த கடத்தலுக்கு உதவியவர்கள்.
- ஜான் பிரிட்டோ ஹவாலா வழிகளைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளுக்கும் பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
- தற்போது ஜான் பிரிட்டோ தலைமறைவாக இருப்பதும், வெளிநாட்டிலிருந்து கொண்டே தனது கடத்தல் சிண்டிகேட்டை (Syndicate) இயக்கி வருவதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறையின் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள “ஜான் பிரிட்டோ” என்ற பெயர்தான் அத்தனைக்கும் காரணம்..
ஏனெனில் ”அமலாக்கத்துறை பிரகடனப்படுத்திய போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ.. தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மனைவியின் தாய்மாமா.. அதாவது அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் லீமா ரோஸ் மார்ட்டினின் உடன் பிறந்த சகோதரர்” என காட்டுத் தீயாக பரவின செய்திகள்.
அதே நேரத்தில் இதற்கு எந்தவித ஆதாரமும் வெளியிடப்படவில்லை. பலராலும் ஆதாரமாக சொல்லப்பட்டது கூட கேரளா வழக்குதான்.
அந்த கேரளா வழக்கு என்ன என்பதை நமது மின்னம்பலம் டீம் ஆராய்ந்தது..
கேரளா வழக்கு என்ன?
- லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் (அதிமுக எம்.எல்.ஏ.), மகன் சார்லஸ் (லட்சிய ஜனநாயக கட்சி, புதுச்சேரி எம்.எல்.ஏ), மகள் டெய்சி (ஆதவ் அர்ஜூனா மனைவி) ஆகியோர் மீது கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு ஒன்று 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மொத்தம் 53 பேர்/ நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட இந்த வழக்கில் ஜான் பிரிட்டோ என்பவரும் ஒருவர்.
- இந்த ஜான் பிரிட்டோ வேறு யாரும் இல்லை.. லீமா ரோஸ் எம்.எல்.ஏ.வின் உடன் பிறந்த சகோதரர்.
ஆனால் அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிரிட்டோவும் மார்ட்டின் குடும்பத்து P. ஜான் பிரிட்டோவும் ஒருவர்தானா? என்பதை எவரும் உறுதி செய்யவும் இல்லை. இப்படி உறுதிப்படுத்தாமலேயே அதிமுக, திமுக கட்சிகளும் கூட அறிக்கைகளை வெளியிட்டன.
இருந்தாலும் நமது மின்னம்பலம், அமலாக்கத்துறையின் ஜான் பிரிட்டோ யார்? மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானா? உண்மைதான் என்ன என்பது குறித்து தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டது.
இது தொடர்பாக லீமா ரோஸ் எம்.எல்.ஏ.விடம் பேசுவதற்கு நாம் முயற்சித்தோம். ஆனால், ”வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இருப்பதால் தம்மால் பேச இயலவில்லை” என லீமா ரோஸ் நம்மிடம் கூறினார்.
நேரில் வந்த ஜான் பிரிட்டோ
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ நேரில் வந்து ஒரு மனு கொடுத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பிரிட்டோ, “போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு. அது நான் இல்லை. என் மீது ஆதாரமின்றி பொய்க் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. தவறான செய்திகளைத் தவிர்க்க வேண்டும். என் மீது போதைப் பொருள் வழக்கு எதுவும் இல்லை.. என் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்” என விளக்கமும் அளித்தார்.
இதனால் லாட்டரி மாஃபியா மார்ட்டின் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மையமாக வைத்து பேசப்பட்ட அனைத்து ”ஜான் பிரிட்டோ” செய்திகளும் ”ஆதாரமற்றது” என்பது நிரூபமணமாகிவிட்டது.
யார் அந்த ஒரிஜினல் ஜான் பிரிட்டோ (John Britto)? அதிர்ச்சி தகவல்கள்
அதே நேரத்தில் அமலாக்கத்துறை தேடுகிற போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ யார்? என்பதை நமது வாசகர்களுக்கு தெரியப்படுத்தும் நமது மின்னம்பலத்தின் புலனாய்வு முயற்சிகள் தொடர்ந்தன.
நமது மின்னம்பலத்தின் புலனாய்வில் ஜான் பிரிட்டோ குறித்த ஆதாரப்பூர்வமான அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுதான் ஜான் பிரிட்டோவின் பாஸ்போர்ட்.

- ஜான் பிரிட்டோவின் பூர்வீகம் சென்னையை அடுத்த கொடுங்கையூர்
- ஜான்பிரிட்டோவின் தந்தை பெயர் இருதயராஜ்.
- ஜான்பிரிட்டோவின் தந்தை இருதயராஜ் நாட்டின் மிக முக்கிய உளவு அமைப்பான ‘ரா’-வில் (RAW – Research Analysis Wing) இளநிலை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- ஜான் பிரிட்டோ சர்வதேச பள்ளி ஒன்றில் கல்வி கற்றவர்.
- சர்வதேச பள்ளியில் படித்த போதும் பள்ளி இறுதியாண்டில் அதாவது பிளஸ் டூ படிக்கும் போதே ஜான் பிரிட்டோவின் வாழ்க்கைப் பாதை தடம் புரண்டு போனது.
- இதனால் பெற்றோரை விட்டு ஜான் பிரிட்டோ பிரிந்தார்
- இந்தியாவை விட்டு இலங்கைக்கு போன ஜான்பிரிட்டோ கால் பதித்தது, “போதைப் பொருள் கடத்தல்” தொழிலில்..
- இலங்கை- இந்தியா இடையே கடல்வழியே போதைப் பொருள் கடத்தி இருநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக ஜான் பிரிட்டோ உருவெடுக்க சட்டம் பாய தொடங்கியது.
- இதனால் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி பதுங்கிய ஜான் பிரிட்டோ, கடல்வழி போதைப் பொருள் கடத்தல் தொழிலை விட்டுவிடவில்லை.
- தன்னுடைய ஒட்டுமொத்தப் போதைப்பொருள் சிண்டிகேட்டையும் இயக்குவதற்காக, ஜான் பிரிட்டோ ஹவாலா பணப் பரிமாற்ற வழிகளைப் பயன்படுத்தினார்.
- ஜான் பிரிட்டோவின் இந்த கடத்தல் நெட்வொர்க்கைதான் அமலாக்கத்துறை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
அமலாக்கத்துறையிடம் போதைப் பொருட்கள்தான் இப்போது சிக்கி இருக்கின்றன.. ஜான் பிரிட்டோ எனும் குற்றவாளியும் விரைவில் பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி என்கின்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
